மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
கோவையில் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை இரவில் இயக்கும் இளைஞர்கள்

கோவையில் அசுர வேகத்தில் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞர்களின் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிவேகமாக அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை இயக்கி பல்வேறு விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்க காவல் துறையினரும் வாகன சோதனைகளும் ஈடுபட்டு அபராதம் விதித்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி சில இளைஞர்கள் மது போதையில் அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
காரமடை ரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடி இருந்தனர். தேர் திருவிழா முடிந்த பின்னர் இரவு நேரத்தில் பிரஸ் காலனியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். அதிவேகத்தில் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச் சென்று உள்ளனர். இதனை காரில் சென்ற குடும்பத்தினர் வீடியோ பதிவு செய்து , காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
இதுபோன்று அச்சுறுத்தும் விதமாக, உயிருக்கு ஆபத்தை உணராமல் வாகனங்களை அசுர வேகத்தில் இயக்கும் இளைஞர்கள் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால், மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.























