வேலூர் : குறைகிறதா கொரோனா தொற்று எண்ணிக்கை? தடுப்பூசிகளின் இருப்பு எவ்வளவு?
இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது .
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழ் நாட்டில் கால்பதித்து பிறகு வெகுதீவிரம் அடைந்தது . இதனால் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையின் பாதிப்பு நகர் பகுதி முதல் கிராம பகுதி வரை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து வேலூர் மாவட்டத்தின் மொத்த கொரோனா நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிய நிலையில் , மின்னல் வேகத்தில் பரவிய தொற்றால் மாவட்டத்தில் அதிகபட்சமாக 4000 நபர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு , வேலூர் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தனர் .பிறகு நோய்த்தொற்றின் எண்ணிக்கை மெல்ல குறைய தொடங்கியது .
நேற்று வேலூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1029 என்று இருந்த நிலையில், இன்று புதிதாக 126 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 506 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639-ஆக குறைந்துள்ளது . வேலூர் மாவட்டத்தில் இன்று 10 நபர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்துக்கு பத்தாயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தடைந்தது. கொரோனா நோயினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பலகட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் , சமூக இடைவெளி , முகக்கவசம் மட்டும் தடுப்பூசிதான், நோய் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற இருக்கும் ஒரே தாரக மந்திரம் என சுகாதார துறையினர் இம்மூன்றையும் முதன்மைப்படுத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் .
இதனால் கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. மற்ற மாவட்டங்களை போலவே வேலூரிலும் இளைஞர்கள் மிக ஆர்வமாக தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு வந்த நிலையில் , தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தடுப்பூசிகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால், கடந்த 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் இந்த மூன்று நாட்களும் , வேலூர் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. இதையடுத்து குறைந்த அளவிலே வர தொடங்கிய தடுப்பூசிகளை கொண்டு நேற்றுவரை 2 .51 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .
நேற்று தடுப்பூசி கையிருப்பு முழுவதும் தீர்ந்த நிலையில் , நேற்றிரவு வேலூர் மாவட்டத்திற்கு புதியதாக 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தது. வேலூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் இந்த தடுப்பூசிகளை 20-க்கும் மேற்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்களை அமைத்து , பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர் .