ப்ளான் போட்ட முதல்வர் : கூவத்துல போட்! புதுப்புது ரூட்! சிங்கார சென்னை 2.0 ப்ளான் இதுதான்..!
சென்னையின் மேயராக இருந்த போது உருவானது தான் சிங்காரச் சென்னை திட்டம்.
சென்னை மாநகராட்சி உலகில் மிகவும் பழமைவாய்ந்த மாநகராட்சிகளில் ஒன்று. மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட இது 1688-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1996-ம் ஆண்டில் மெட்ராஸ் மாநகரம், சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1996ல் நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்டாலின். சென்னையின் மேயராக இருந்த போது உருவானது தான் சிங்காரச் சென்னை திட்டம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பாலங்கள் கட்டுதல், பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரைகளை அழகுபடுத்துதல், சாலைகளை விரிவாக்கம் செய்தல், போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட எண்ணற்ற பணிகள் நடைபெற்றுவந்தன. சென்னையில் இருக்கும் சில முக்கிய மேம்பாலங்கள் ஸ்டாலின் மேயராக இருந்தபோது கொண்டுவரப்பட்டவையே. 2001ல் மீண்டும் சென்னையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். ஆனால், ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தின் காரணமாக எம்எல்ஏவாகவே தொடர்ந்தார். அதன்பின்னர், 2006ல் துணை முதலமைச்சராகி சென்னையை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்பின் மீண்டும் ஆட்சி மாற்றம். கடந்த 10 ஆண்டுகளில் சிங்காரச் சென்னை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில் தான் இந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். மேயராக இருந்தபோதே சென்னையை சர்வதேசதரத்திலான ஒரு நகராக உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர். இப்போது முதலமைச்சராகவே ஆகிவிட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்று நடைபெற்ற முதல் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையிலேயே சிங்காரச் சென்னை திட்டத்தை அறிவித்துவிட்டார் ஸ்டாலின்.
பட்ஜெட்டின் போது அதற்காக முதற்கட்டமாக 2021-2022ம் ஆண்டுக்கான பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவும், பணிகளை கண்காணிக்கவும், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இத்திட்டப் பணிகளுக்கான தொடர்பு அமைப்பாகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் என்ன பணிகளெல்லாம் செய்யவிருக்கிறார்கள்?
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம் மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
பசுமை சென்னை
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மாசு மற்றும் வெப்பத்தை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சென்னையின் பசுமைப்பரப்பு விரிவுபடுத்தப்படுத்தும் வகையில் நீர் நிலைகளில் பசுமைப்பூங்காக்கள் அமைத்தல், மேம்பாலங்களின் கீழ் பூங்கா, செடிவளர்ப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்படும், மியாவாக்கி காடுகள் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளில் தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தூய்மை மிகு சென்னை.
தூய்மை மிகு சென்னை திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள பழைய குப்பை கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நீக்கி நிலத்தை பசுமை நிலமாக மீட்டெடுத்தல். கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை சேகரித்து விஞ்ஞான முறையில் மறு சுழற்சி செய்தல். குடிசைப் பகுதிகளில் தேங்கும் அதிகப்படியான குப்பைக் கழிவுகளை அகற்றுதல், இறைச்சிக் கூடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் நவீன மயமாக்குதல், சென்னை மாநகரை குப்பை இல்லாத மாநகராய் மாற்றுதல். சுவரொட்டிகள் இல்லாத சென்னையாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
எழில்மிகு சென்னை
எழில் மிகு சென்னை திட்டத்தின் கீழ் சென்னையை அழகான நகராக மாற்றும் வகையில் சாலைகளை சீரமைத்தல், போக்குவரத்தை கையாளுதல், பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐஐடி மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்களை அழகுபடுத்துதல். போஸ்டர்கள் இல்லாத நகராக சென்னையை மாற்றுதல், பழமையான கட்டிடங்களுக்கு விளக்குகள் அமைத்தல், பாலங்களை விளக்குகளால் அலங்கரித்தல், கட்டிட கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுதல், சந்தைகள், இறைச்சிக் கூடங்களை நவீனமாக்குதல், பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
கலாசாரம் மிகு சென்னை
கலாச்சாரம் மிகு சென்னை திட்டத்தின் கீழ் சென்னை நாள் மற்றும் சென்னை சங்கமம் உள்ளிட்டவைகளை மீண்டும் செயல்படுத்துதல்; புராதன இடங்கள் சீரமைப்பு, சுவர்களில் ஓவியங்கள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
நீர்மிகு சென்னை
நீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் 25 நீர் நிலைகளை சுத்தம் செய்தல், நிலத்தடி நீரை மேம்படுத்துதல், வடிகால்களை மேம்படுத்துதல், கழிவு நீர்சுத்திகரிப்பு, மழைநீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
கல்விமிகு சென்னை
கல்விமிகு சென்னை திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்குதல், உயர்கல்விக்கு உதவுதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், படிப்பதற்கு வீட்டில் போதுமான இடம் இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கற்றல் மையங்களை ஏற்படுத்துதல், நவீன நூலகங்கள் அமைத்தல், அடிப்படை அறிவியல், தொழிற்கல்வி, தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்டவைகளை மாணவர்கள் கற்கும் வகையில் பூங்கா உருவாக்கப்படும்.
நலம் மிகு சென்னை
நலம் மிகு சென்னை திட்டத்தின் கீழ் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துதல்; பொதுசுகாதாரத்தை மேம்படுத்துதல்; பொது கழிவறைகளை அமைத்தல்; விலங்குகளுக்கான pet park உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்துதல், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து ஒவ்வொரு வீட்டையும் கழிவுநீர் அமைப்புடன் இணைத்தல், மோட்டார் அல்லாத வாகனப் போக்குவரத்து ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ப்ராஜக்ட் ப்ளூ
ப்ராஜக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் 21 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரைகளை மேம்படுத்துதல்; நீர் விளையாட்டுகளுக்கான இடங்களை அமைத்தல், மாற்றுத்திறனாளிகளும் கடற்கரைகளை பயன்படுத்தும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், வாக்கிங், ஜாக்கிங் செல்பவர்களுக்கான பிரத்யேக பாதைகளை உருவாக்குதல், நீருக்கடியில் அக்வாரியம் உருவாக்குதல் உள்ளிட்டபணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சுற்றுலா மேம்பாடு
சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் ராட்சத ராட்டினங்களை உள்ளடக்கிய பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்க பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இவைகள் மட்டுமல்லாது போக்குவரத்து பயன்பாடு, மக்களின் பயணங்களை எளிதாக்குதல், மக்கள் மாநகராட்சியை எளிதாக அணுகுதல், E - governance என பல்வேறு வகையாக பணிகளை உள்ளடக்கி சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.