பட்டா பெயர் மாற்றம் ; ஆதாரங்கள் காணாமல் போனதால் சிக்கல் !! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
பட்டா மாறுதல் தொடர்பான ஆவணங்களை 10 ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பட்டா - இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம்
தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில், பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்காக மக்கள் தாலுகா அலுவலகத்தை அணுகுவது வழக்கம். பட்டா பெயர் மாற்றம் செய்ய, வருவாய் துறை அலுவலர்கள், அதிகம் அலைய விடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் இ - சேவை மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
பட்டா மாறுதல் தொடர்பான வழக்குகள் - ஆதாரம் எடுப்பதில் சிக்கல்
தற்போது பொது மக்கள் இ - சேவை மையங்கள் வழியே விண்ணப்பிக்கின்றனர். அதன் அடிப்படையில் ஆன்லைன் முறையில், பட்டா மாறுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் மேனுவல் முறையில் விண்ணப்பங்கள், இணைப்பு ஆவணங்களின் பிரதிகள், கோப்புகளாக சேகரிக்கப்படுகின்றன. இந்த ஆவணங்களை பாதுகாத்து வைப்பதில்லை. இதனால் பட்டா மாறுதல் தொடர்பான வழக்குகள் வரும் போது, ஆதாரங்கள் எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, அவற்றை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை உயரதிகாரிகள் கூறும் போது ;
பட்டா மாறுதல் பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டாலும், காகித வடிவில், குறிப்பிட்ட சில ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டா மாறுதல் தொடர்பான கடிதப் போக்குவரத்துகள், உத்தரவுகள் போன்ற ஆவணங்களை, 10 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர்கள் இதற்கான இடவசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.





















