சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையின் அடையாறு பகுதியில் காகங்கள் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்று அடையார். இந்த பகுதி ஏராளமான மரங்களை கொண்ட பகுதியாகும். சென்னையில் மற்ற பகுதிகளை காட்டிலும் மிகவும் குளுமையாக இருக்கும் சுற்றுப்பகுதியாக அடையாறு உள்ளது. இதனால், மற்ற பகுதிகளை காட்டிலும் அடையாறு பகுதியில் அதிகளவு பறவைகள், விலங்குகள் இருப்பது வழக்கம்.
அடுத்தடுத்து உயிரிழந்த காகங்கள்:
இந்த சூழலில் கடந்த 5ம் தேதி முதல் அடையாறு, இந்திரா நகர் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காகங்கள் திடீரென ஆங்காங்கே உயிரிழந்து விழுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை 14 காகங்கள் உயிரிழந்த நிலையில், நேற்று 4 காகங்கள் திடீரென உயிரழந்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த காகங்களின் உடல்களை கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்துள்ளனர். பரிசோதனையின் முதற்கட்ட முடிவுகளை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பியுள்ளனர்.
என்ன காரணம்?
இந்த பரிசோதனையின் முடிவில் உயிரிழந்த காகங்களின் மண்ணீரல் வீக்கமும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், காகங்களின் உயிரிழப்பிற்கு காரணம் என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்வதற்காக உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை மத்திய பிரதேசத்தில் போபாலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அடையாறு மற்றும் இந்திராநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். காகங்களின் உயிரிழப்பு குறித்து பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன், இது நோய்த் தொற்றாக இதுவரை தெரியவில்லை. காரணத்தை கண்டறிந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கண்காணிப்பு:
மேலும், சென்னையின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்று காகங்கள் உயிரிழப்பு அரங்கேறியுள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அடையாறு மற்றும் இந்திராநகர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சுகாதாரப் பணிகளையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக, காகங்களை யாரும் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில்லை. அவைகள் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் சாலையோரம் வைக்கப்படும் உணவுகளையே சாப்பிட்டு வருகின்றன. கல்லீரல், மண்ணீரல் பாதிப்பிற்கு உணவுகளே பிரதான காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால், மனிதர்களுக்கு ஏதும் தொற்று பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





















