CTRL Movie Review : படத்தின் வில்லனே ஏ.ஐ தான்...நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் CTRL பட விமர்சனம்
CTRL Movie Review in Tamil : அனன்யா பாண்டே நடித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியான CTRL படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
Vikramaditya Motwane
Ananya Panday , Vihaan Samat
NetFlix
CTRL திரைப்பட விமர்சனம்
அனன்யா பாண்டே நடித்து விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் CTRL. கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஏ.ஐ என்று சுருக்கமாக சொல்லப்படும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்துகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகரகளிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. CTRL படத்தின் கதை மற்றும் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
CTRL படத்தின் கதை
கல்லூரி முதலாம் ஆண்டில் சந்தித்துக் கொள்ளும் நெல்லா மற்றும் ஜோ ஆகிய இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கல்லூரி முடிந்தும் தொடரும் இவர்களின் காதல் வாழ்க்கை முழுவதையும் சமூக வலைதளத்தில் ரீல்ஸ்களாகவும் வீடியோக்களாகவும் பதிவிடுகிறார். மக்களிடம் பெரியளவில் ஆதரவைப் பெறும் இந்த ஜோடி சோசியல் மீடியா பிரபலங்களாக ஆகிறார்கள். ஒன்றாக சேர்ந்து வசிக்கத் தொடங்குவது முதல் சேர்ந்து சுற்றுலா செல்வதுவரை தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார்கள். பல்வேறு நிறுவனகளின் பொருட்களை விளம்பரம் செய்து லட்சக்கணக்கில் பணம் சேருகிறது. வாழ்ந்தால் இப்படி ஒரு காதல் ஜோடியாக வாழ வேண்டும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு காதல் ஜோடியாகிறது நெல்லா மற்றும் ஜோ கூட்டணி.
ஏ.ஐ பற்றி ஏற்கனவே நமக்கு தெரிந்த தகவல்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு படம் என்பதால் சிலருக்கு இப்படம் பெரியளவில் ஆர்வத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். கூடுதலாக கடந்த சில ஆண்டுகளில் இதே மாதிரியான எக்கச்சக்கமான படங்கள் வெளியாகி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அனைத்தும் ஒரே மாதிரியான கதைகள் என்பதால் ஒரு முறைக்கு மேல் பார்க்கவோ இல்லை கூடுதலாக விவாதிக்கவோ படத்தின் எந்த இடமும் இல்லை.
எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருக்க ஜோவின் பிறந்தநாளுக்கு அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெல்லா அவன் இருக்கும் இடத்திற்கு செல்கிறாள். இதனை சமூக வலைதளத்தில் லைவாக வீடியோவும் எடுக்கிறார். சர்ப்ரைஸ் கொடுக்கச் சென்ற நெல்லாவிற்கு அதை விட பெரிய அதிர்ச்சி கிடைக்கிறது. ஜோ இன்னொரு பெண்ணை முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் நெல்லா கத்தி கூச்சல் போடுகிறார். இந்த வீடியோ வைரலாகிறது. காதல் தோல்வி ஒரு பக்கம் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் என தவித்துக் கொண்டிருக்கும் நெல்லாவின் கண்கலுக்கு CTRL என்கிற புதிய செயலி ஒன்று அறிமுகமாகிறது.
எதார்த்தத்திலும் சமூக வலைதளத்திலும் நம் வாழ்க்கையை வழிநடத்த உதவும் ஒரு ஏஐ தொழில்நுட்பம் தான் CTRL. இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தும் நெல்லா தனது காதலைப் பற்றிய எல்லா நினைவுகளையும் அழிக்கிறார். தானே சொந்தமாக ஒரு கணக்கைத் தொடங்கி அதில் வீடியோக்கள் வெளியிட்டு மீண்டும் பெரிய பிரபலமாகிறார். அவருக்கு கிட்டதட்ட ஒரு பி.ஏ மாதிரி இருந்து உதவுகிறது அந்த ஏ.ஐ. இப்படியான நிலையில் நெல்லாவின் முன்னாள் காதலன் ஜோ ஒரு நாள் திடீரென்று கொல்லப்படுகிறான். ஜோவின் கொலைக்கும் இந்த ஏ.ஐ க்கும் என்ன தொடர்பு . மனிதர்களின் வாழ்க்கையில் அத்தியாசமான ஒரு அங்கமாக மாறிவரும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கம் என்ன என்பதை விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் பாணியில் சொல்கிறது CTRL திரைப்படம்
விமர்சனம்
உலகில் உள்ள மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட சோசியல் மீடியா இன்று அசுர வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இதன் அபரிமிதமான பயன்பாட்டார்ல் உளவியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எல்லா ஆபத்துகள் தெரிந்தே தான் நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறோம். தற்போது ஏ.ஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் அசாத்தியமான விஷயங்களை சாத்தியப்படுத்தி வருகிறது, ஆனால் எந்த ஒரு பொருளின் பயண்பாட்டிற்கு ஒரு விலை உண்டு . ஏ.ஐ பொறுத்தவரை நம் தனியுரிமைகளின் அழிவுதான் நாம் கொடுக்கும் விலை. நம்மைப்பற்றிய தனிப்பட்ட தகவல்கள் , நாம் என்ன வேலை செய்கிறோம், என்ன சாப்பிடுகிறோம், என்ன உடை அணிகிறோம், நம் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ, நம்மை எது ஈர்க்கும் என எல்லா தகவல்களும் ஏதோ ஒரு தனியார் நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள். இந்த மூலப்பொருட்களை வைத்து தான் அவர்கள் தங்களது ப்ராடக்ட்களை உற்பத்தி செய்கிறார்கள். சந்தையில் கிடைக்கும் பொருட்களை நாம் வாங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு விற்பனை பொருளே நாம் தான் என்பதை மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இப்படம்
போர் அடிக்கும் மெசேஜ் மாதிரி இல்லாமல் ஒரு லவ் ஆங்கிள் வைத்து இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது கொஞ்சம் சுவாரஸ்யமான அனுபவமாக உள்ளது. கதைக்கு ஏற்றபடி படமும் பார்க்க முழுக்க முழுக்க ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் போல் சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்தின் நேரடியாக அனன்யா பாண்டே ஒருவர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் தகவல்களாக இடம்பெற்றலும் அவர்களை நம்மால் கேரக்டராக உணரமுடிகிறது.
த்ரில்லர் , மெசேஜ் , ரொமான்ஸ் என பல்வேறு ஜானர்களில் படத்தின் சில பாகங்கள் இருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் இதை எல்லாம் கடந்து கசப்பான ஒரு உணமையுடன் முடிகிறது. ஏ.ஐ இவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்தது தான் என தெரிந்தாலும் அதே ஏ.ஐ மூலம் இறந்த தனது காதலுடன் பேசுகிறார் நெல்லா. டெக்னாலஜி நம் கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த காலம் போய் நாம் தான் டெக்னாலஜியின் கையில் இருக்கிறோம் என்பதையே இந்த க்ளைமேக்ஸ் காட்சி நமக்கு உணர்த்துகிறது