Summer : ’கண்கள்.. உடல் சூடு.. இன்னும் இன்னும்..’ : இந்த 6 விஷயங்கள்ல கவனமா இருங்க.. கோடைக்கு அவசியம் இந்த டிப்ஸ்..
கோடை வந்துவிட்டால் வாட்டும் வெயிலில் வீட்டினுள் இருந்தாலேகூட உடல் சோர்வாகிவிடும். அதனால் கோடை காலத்தில் உடலைப் பேணுவது என்பது பெரிய சவால்.
கோடை வந்துவிட்டால் வாட்டும் வெயிலில் வீட்டினுள் இருந்தாலேகூட உடல் சோர்வாகிவிடும். அதனால் கோடை காலத்தில் உடலைப் பேணுவது என்பது பெரிய சவால். வியர்வை தரும் எரிச்சலில் எதையுமே செய்யப் பிடிக்காது என்றாலும்கூட உடலை நாம் பாதுகாக்க எளிமையான இந்த 6 டிப்ஸ் பின்பற்றினால் கூட போதுமானதே.
நீர்ச்சத்து:
நம் உடலுக்கு நீர்ச்சத்து மிகமிக அவசியம். கோடை காலத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதால் வெப்பம் சார்ந்த நோய்களைத் தடுக்கலாம். வெறும் தண்ணீர் குடித்து மட்டுமே உடல் நீர்ச்சத்து தேவையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கூடுதலாக நிறைய வழிகளைப் பின்பற்றலாம். நம்முடைய உடலுக்குத் தேவையான நீரில் 20% நீர் நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்து கிடைக்கிறது.
வெள்ளரிக்காய், செலரி, முள்ளங்கி, தக்காளி, குடைமிளகாய், தர்பூசணி, ஆரஞ்சு, கிரேப்ஃப்ரூட், போன்ற பழங்களும் காய்கறிகளும் நீர்ச்சத்து நிறைந்தவை. இவை அனைத்தும், 90 சதவீதம் வரை நீர்ச்சத்தைக் கொண்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிரமங்கள் என்ன?
கோடைக் காலத்தில் காபி, டீ மற்றும் செயற்கைக் குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பதால் பணத்தை இழப்பது மட்டுமல்ல உடலையும் கெடுத்துக்கொள்கிறோம். மென்பானங்களைக் குடிப்பதால் வெயில் காலத்தில் ஏற்படுகிற சிறுநீர் கல் தொல்லை அதிகப்படும். இவற்றில் உள்ள செயற்கை சர்க்கரை உடல் பருமனுக்கு வழிவகுக்கும். கவர்ச்சி வண்ணங்களுக்காக இவற்றில் கலக்கப்படும் சில வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும். எனவே, இயற்கை தந்திருக்கும் வரமான இளநீர் இருக்க, மென் பானங்களை நாடி செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
கோடைகால வெப்பம் அதிகப்படியான வியர்வையை உண்டாக்கும். எனவே, வழக்கத்தை விட, வியர்வை வழியாக உடலின் நீர்ச்சத்தை அதிகமாக இழக்க நேரிடும். குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது குளிர் நீர் ஷவரில் சில நிமிடங்கள் நிற்பது, இழந்த நீரை உடலுக்கு மீட்டுத்தரும்.
பழங்கள் சாப்பிடுவோம்:
பழங்கள் கோடைக்காலத்தில் மட்டுமல்ல எல்லாப் பருவத்திலும் நமக்கு நன்மை தருகின்றன. நம் உடலுக்குத் தேவைப்படுகிற பலவிதச் சத்துகளைக் குறைந்த செலவில் அள்ளித்தருவது பழங்களே. பழங்களில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் உள்ளது.
கோடையில் திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றைச் சிட்ரஸ் பழங்கள் என்கிறோம். இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதே, இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம். இந்தச் சத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
தூக்கம்:
தூக்கம் நம் வாழ்வில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தரமான தூக்கம் இல்லாமல் நமது அன்றாட நடைமுறைகள் முழுமையடையாது, இது நாம் உயிர்வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான தூக்கம் உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் பிற நிலைமைகளின் அபாயங்களுகு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் கோடை காலமாக இருந்தாலும் கூட 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியம்.
கண் பராமரிப்பு
கோடையிலிருந்து கண்களை பாதுகாக்க வெளியில் செல்லும்போது கருப்புக் கண்ணாடி அணிந்து செல்லுங்கள்.தொடர்ந்து கணினியில் கண் பதிக்காமல் அவ்வபோது எழுந்து கண்களை சுத்தமான நீரில் கழுவுங்கள். ஓய்வு நேரங்களில் குளிர்ச்சியான வெள்ளரித்துண்டுகளை கண்களின் மீது வைத்து எடுங்கள். பன்னீர் பஞ்சில் தோய்த்து கண்களை மூடி கண்ணை சுற்றி ஒற்றி எடுங்கள்.
கோடைக்கு ஏற்ற உணவு:
கோடை காலத்திற்கு என்று சில பருவக்கால பழ வகைகள் உண்டு. அவை நமக்கு நன்மை பயக்கின்றன. மேலும் அந்த உணவுகள் சுவையானதாக இருக்கின்றன. கோடை காலத்தில் உள்ள அதிகமான பழங்கள் உடலுக்கு நீரேற்றம் அளிப்பவையாக உள்ளன. அதனால் கோடையில் பழங்கள், காய்கறிகள், கீரைவகைகள் அதிகமாக உட்கொள்ளுங்கள்.
மதுவை தவிர்க்கவும்:
மதுபானங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவிடக் கூடியவை. அதனால் கோடை காலத்தில் மதுபானத்தை முற்றிலுமாகவே தவிர்ப்பது நல்லது. குடித்தால் தான் முடியும் என்று நோயாளிகளாக இருப்பவர்கள் கூடவே வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை உட்கொள்ளவும்.