மேலும் அறிய
Advertisement
Debt Problem: கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க இத கண்டிப்பா கடைபிடிங்க.!
கடன் திருப்பிச் செலுத்துவதுதான் கடினம். அதற்காகக் கடனே வாங்காதீர்கள் என்று சொல்லவில்லை. இருப்பினும் சில விசயங்களுக்காக துணிந்து கடன் வாங்காதீர்கள்.
வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதில் ஆரம்பித்து, குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பது வரை பெரும்பாலானவர்களின் வாழ்க்கை, கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்துவதிலுமே கழிந்துகொண்டிருக்கிறது. கடன் வாங்கும்போது சுகமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் திருப்பிச் செலுத்துவதுதான் கடினம். அதற்காகக் கடனே வாங்காதீர்கள் என்று சொல்லவில்லை. இருப்பினும் சில விசயங்களுக்காக துணிந்து கடன் வாங்காதீர்கள்.
முதலீடு செய்ய கடன் வாங்காதீர்கள்
நம்மில் பலர், 80சி பிரிவின்கீழ் வரிச்சலுகைகளைப் பெறுவதற்காக கடன்களை வாங்கி முதலீடு செய்வார்கள். சேமிப்பதற்காகவோ, முதலீட்டு விஷயங்களை மேற்கொள்வதற்காகவோ கடன் வாங்குவது தவறான விஷயம். ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பணத் தேவை மிக அதிகமாக இருக்கும். பெரும்பாலான வங்கி நிறுவனங்கள் ஆஃபர்களை அந்த நேரத்தில்தான் முடுக்கி விடுவார்கள். அனைத்து அலுவலகங்களிலும், அப்போதுதான் முதலீட்டு ஆவணங்களைக் கேட்டு நம்மைத் துரிதப்படுத்துவார்கள். தனிநபர் கடன் பாதுகாப்பற்றது, சுமார் 12%-20% வரை அதிக வட்டி வசூலிக்கப்படும் கடன் என்றாலும் கூட, உடனே கிடைக்கிறது என்பதற்காக நம்மில் நிறையபேர் அந்தக் கடனையே தேர்வு செய்து, சிக்கலில் சிக்கிக்கொள்வோம். இது மாதிரியான பிரச்னைகளை தவிர்க்க வேண்டும் என்றால், சேமிக்கும் பணத்தை வைத்து, நிதி ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. கடன் வாங்கி முதலீடு செய்வதில் இருக்கும் மிக முக்கியமான பிரச்னை என்னவெனில், நாம் செய்யும் முதலீடுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்காமல், நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டால், கடனுக்கான வட்டியும், முதலீட்டின் மீதான நஷ்டமும் ஒருசேர நம் கழுத்தை இறுக்க ஆரம்பித்துவிடும்.
நம்மில் பலர் நிலம் வாங்க வேண்டும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இன்றைய சூழ்நிலையில், நடுத்தர மக்களால் கடன் மூலமாகத்தான் சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள முடிகிறது. முறையான வருமானம் இருக்கும் பட்சத்தில், வீடு கட்டுவதற்காக கடன் பெறுவது சரி. ஆனால், நிலத்தில் முதலீடு செய்வதற்காக கடன் பெறுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவசர தேவைக்காகப் பணம் வேண்டும் என்றால், நிலத்தை உடனே விற்று பணமாக்க முடியாது.
ஊர் சுற்றுவதற்காக கடன் வேண்டவே வேண்டாம்
வருடத்துக்கு ஒருமுறையாவது, வெளிநாடுகளுக்கு ஃபேமிலி டிரிப் அடிக்க வேண்டும் அல்லது உள்நாட்டில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்காவது போக வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கும். ஆனால், அதற்காக சேமிக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதில். இன்றைய நிலையில் வங்கிகள் சுற்றுலா செல்வதற்காகவும் கடன்களை கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அப்படியே இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறது கிரெடிட் கார்டு என்பதுதான் பலரின் பொதுவான எண்ணம். பயணிப்பதில் கிடைக்கும் அலாதி சுகம் வேறெதிலும் கிடைக்காது. ஆனால், கடன் வாங்கிப் பயணிப்பதால் சுகத்துக்கு மாறாக, பணச் சுமைதான் அதிகரிக்கும்.
பயணம் என்பது திடீர் தேவைகளுக்குள் வராது என்பதாலும், திட்டமிடலுக்குப் போதுமான கால அவகாசம் இருக்கும் என்பதாலும், சுற்றுலா பயணத்தை தொடங்குவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக பட்ஜெட் போடுவது அவசியம். அதற்கான தொகை கையில் இருக்கும் பட்சத்தில் கவலை இல்லை. இல்லாத பட்சத்தில், அந்தத் தொகையைச் சேமிக்கும் வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தொகையை சேமித்துக் கொண்டு, சுற்றுலாவுக்குக் கிளம்புங்கள்.
கல்யாணம் பண்ண கடன் வாங்கி, மொத்த வாழ்கையையும் அடகு வைக்காதீங்க
நம் கலாச்சார முறைப்படி, திருமணம் என்பது மிகப்பெரிய செலவு வைக்கக் கூடிய ஒரு விஷயம். அதைச் சமாளிக்க முடியாமல்தான் பெரும்பாலான குடும்பங்கள் கடன் தொல்லையில் சிக்கிக் கொள்கின்றன. கல்யாணத்துக்காகக் கடன் வாங்கிவிட்டு, அதைக் காலம் முழுக்க கட்டிக் கொண்டிருப்பவர்களையும் அன்றாடம் பார்க்கிறோம். சம்பளதாரர்கள் திருமண விஷயத்தில் செய்யும் மிகப்பெரிய தவறு, வங்கியை அணுகி தனிநபர் கடன் பெறுவதுதான். அதுமட்டுமல்லாமல், கிரெடிட்கார்டு கடன், ஃபர்னிச்சர் கடன் என எதிர்கால வாழ்க்கை மொத்தத்தையும் கடனுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.
திருமணத்தைக் காரணம் காட்டி கடன் சுமையை அதிகரித்துக் கொள்வது, திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை முறையில் மிகப்பெரிய குழப்பத்தை கணவன் மனைவிக்குள் ஏற்படுத்தும். அதனால், கடன்களை அதிகப்படுத்துவதை விட, திருமணச் செலவுகளை சிக்கனப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வேண்டாமே
நம் அருகில் இருப்பவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து, பார்த்தே நாம் வாழ்ந்து பழகிவிட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் ஏசி வாங்கினால், நாமும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவர் காஸ்ட்லியான ஸ்மார்ட்போன் வாங்கினால், நாமும் அதிக விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி, வாழ்க்கைமுறையை ஆடம்பரப்படுத்திக் கொள்கிறோம். விலை அதிகம் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்கள், ஐபோன் என அனைத்தையும் காசு கொடுத்து வாங்கினால் பரவாயில்லை. இ.எம்.ஐ., மூலம் வாங்குவதில்தான் பிரச்னை அதிகம் இருக்கிறது.
முதலில் அதிக கடன்களால் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். வீட்டுத் தேவைகளுக்கான பொருள்களை வாங்குவது செலவு கணக்கில்தான் சேரும்.
செலவு செய்வதற்காகச் சம்பாத்தியத்தைத்தான் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, கடன் சுமையை பெருக்கிக் கொள்ளக்கூடாது.
ஒரு கடனிலிருந்து தப்பிக்க இன்னொரு கடன்
இருப்பதிலேயே இந்தக் காரணம்தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஏற்கெனவே வாங்கி இருக்கும் ஒரு கடனை அடைப்பதற்காக, வங்கியிலோ அல்லது வெளியிடங்களிலோ கடன் வாங்குவது முறையாகாது. இந்தப் பழக்கம் உங்களை எப்போது கடனாளியாகவே வாழ்வதற்குத்தான் பழக்குமே தவிர, பணத்தேவையைச் சீர் செய்வதற்கு உதவி செய்யாது.
ஒரு கடனை அடைக்க முடியாமல் இருக்கும்போது, இன்னொரு கடன் வாங்கினால், அந்தக் கடனுக்கும் நீங்கள் வட்டி கட்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். வட்டியில்லாமல் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கடன் கிடைக்கிறது என்றால், அதை வாங்கி ஏற்கெனவே இருக்கும் கடனை அடைக்கப் பயன்படுத்துங்கள். இருப்பினும், வட்டியில்லாமல் கொடுத்தாலும் கடன்தான் என்பதால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுங்கள். இதனால் கடன் வாங்க யோசிக்கும் போதே இது அவசியமா? அநாவசியமா? கடனை அடைக்க முடியுமா? என்றெல்லாம் யோசித்து முடிவெடுங்கள். இதற்கு சிறந்த தீர்வு முன்கூட்டியே யோசித்து சமயோதிதமாக சேமித்து செயல்படுவதுதான்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion