Fruits Eat Right : பழங்களை சரியான முறையில சாப்பிடுறீங்களா? இந்த 5 தப்புகளை பண்ணவே பண்ணாதீங்க..
பழங்களில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்க பழங்களை சாப்பிட்ட உடன் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத்தேவையில்லை என்பார்கள் அதுபோன்று பல்வேறு பழங்களுக்கும் பொருந்தும். தினசரி ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எளிதாக கிடைக்கின்றன. எனவே நாம் முடிந்த அளவில் நம் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். பழத்தின் முழு சத்துக்களும் கிடைக்க பழம் சாப்பிட்ட உடன் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது.
1. பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும் ..
பழங்களில் பெரும்பாலும் நீர்ச்சத்து மிகுதியாக இருக்கும். பழங்களை உட்கொண்ட உடனேயே தண்ணீரை உட்கொள்வது செரிமான செயல்முறையை சீர்குலைத்து, செரிமானத்தை தாமதப்படுத்துகிறது. அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். உங்கள் உடல் அதிகப்படியான தண்ணீரைப் பெறும்போது, சிறுநீரகம் சீராக செயல்படாமல், குமட்டல், தலைவலி மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
பழங்களை சாப்பிட்ட பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
2. நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்..
உணவுப் பொருட்களை முன்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கும் பழக்கம் நம்மில் ஏராளமானோருக்கு உண்டு. வெட்டிய பழங்களை நீண்ட நேரம் வைத்திருப்பது அது ஆக்ஸிஜனேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இது அவற்றின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை கணிசமாகக் குறைக்கிறது. மேலும், அவை ஈரமாகி, சுவையை இழக்கின்றன. எனவே ஒரு பழத்தின் முழுமையான ஊட்டச்சத்தை பெற அவற்றை கழுவி அப்படியே சாப்பிடலாம்.
3. பழச்சாறுக்கு பதில் பழங்களாகவே உட்கொள்ளலாம்
பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட ஜூஸாக குடிப்பதை ஏராளமானோர் விரும்புகின்றனர். ஆனால் பழச்சாறு பழங்களில் இருந்து பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்களை நீக்கிவிடுவதாக கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். உங்களுக்குப் பிடித்தமான காலைப் பழச்சாற்றை ருசிப்பதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமில்லை.
அதே நேரத்தில் முழு பழங்களை சாப்பிடுவது அந்த பழத்தில் உள்ள முழு சத்தை பெற வழி வகுப்பதாக கூறப்படுகிறது.
4. இரவில் பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்
பழங்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த உணவு. இருந்த போதிலும் பழங்களை இரவில் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும் ஹார்மோன்களின் சுரப்புக்கு வழிவகுக்கும்.
எனவே இரவில் பழத்தை சாப்பிடுவது உங்கள் தூக்கத்தை சீர்குலைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
5. குளிர்ந்த பழுக்காத பழங்களை உட்கொள்வதை தவிர்க்கவும்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பழங்கள் உட்பட்ட குளிர்ந்த உணவுகளை ஜீரணிக்க உடலுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இது பழுக்காத அல்லது குளிர்ந்த பழங்களுக்கும் பொருந்தும். இது அஜீரணம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பல்வேறு இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. பழங்களின் முழுப் பலனையும் பெற, அறை வெப்பநிலையில் பழுத்த பழங்களை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.