Tapioca Pearls Vada: ஜவ்வரிசியில் டேஸ்டியான வடை செய்யலாம்... இந்த மாதிரி செய்து அசத்துங்க...
சுவையான ஜவ்வரிசி வடை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
வடை மாலை நேரத்தில் டீ உடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இது அனைவருக்கும் பிடித்தமான ரெசிபியும் கூட. உளுந்து வடை, மசால் வடை, வாழைப்பூ வடை, கொள்ளு வடை என பல வகையான வடைகள் உள்ளன. தற்போது நாம் ஜவ்வரிசி வடை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். வாங்க சுவையான ஜவ்வரிசி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – அரை கப்
உருளைக்கிழங்கு – 3 வேக வைத்தது
வேர்க்கடலை – அரை கப்
பச்சை மிளகாய் – 4
எலுமிச்சை பழச்சாறு – ஒரு பழம்
சீரகம் – அரை ஸ்பூன்
கல் உப்பு – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை – நறுக்கியது ஒரு கைப்பிடி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உறித்து, துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாயகன்ற பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கு, ஊறவைத்த ஜவ்வரிசி, எலுமிச்சை பழச்சாறு, சீரகம், கல்லுப்பு, அரைத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மசித்து விட்டு, பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்.
கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, ஜவ்வரிசி கலவையை வடை போல் தட்டவேண்டும்.
தட்டிய வடையை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஜவ்வரிசி வடை தயார்.
மேலும் படிக்க