DMK On Nirmala Sitharaman: வெள்ள பாதிப்பு - ”வாட்ஸ்-அப் பல்கலைக்கழகம்” - நிர்மலா சீதாராமன், பாஜகவை விளாசும் திமுக
DMK On Nirmala Sitharaman: தமிழக மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
DMK On Nirmala Sitharaman: தமிழக மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் உண்மை இல்லை என திமுக விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு வெள்ள பாதிப்பு:
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான கருத்து மோதல் வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பால் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. அந்த செய்தியாளர் சந்திப்பில் ,வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னவென” நிதியமைச்சர் கேள்வி எழுப்பினார். இதற்கு, “நிர்மலா சீதாராமன் வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல்களை பெறுவதாக" திமுக சார்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் மேம்பட்ட உபகரணங்கள் இருக்கிறது. டிசம்பர் 17 ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே முன்னறிவித்துள்ளது எனவே, முன்னெச்சரிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என கூறுபவர்கள் இதை இதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என கூறினார்.
வாட்ஸ்-அப் யூனிவெர்சிட்டி - திமுக பதிலடி:
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கவில்லை என, முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளித்துள்ளர். அவருக்கு திமுக சார்பில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில், ” டிசம்பர் 18-ம் தேதி தான் வானிலை துறை ரெட் அலர்ட் ட்வீட் செய்தது. 17-ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் தான் இருந்தது. எனவே, பாஜகவைச் சேர்ந்த அரசியல்வாதியாக நிர்மலா சீதாராமன் பேசியிருந்தால், அவர்களுக்கான தகவல்களை 'வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில்’ இருந்து அவர் பெற்றிருப்பார். ஒருவேளை அமைச்சராக பேசினால், அவருக்கு உண்மையின் மீது பிடிப்பு இல்லை என்பதை தான் அந்த செய்தியாளர் சந்திப்பு காட்டுகிறது” என திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் காட்டமாக பேசியுள்ளார். பாஜகவினர் தவறான தகவல்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக, திமுக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். அவரது மொழி போரில் எதிரி தேசத்தினரிடம் பயன்படுத்துவதை போன்று உள்ளது” என கூறியிருந்தார்.
வானிலை எச்சரிக்கை முன்பே கிடைத்ததா?
வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான சென்னை மண்டல அறிக்கைகளை ஆய்வு செய்ததில், டிசம்பர் 11 அல்லது 12 ஆம் தேதிகளில் மிக அதிக மழை அல்லது மிகக் கனமழை பற்றிய எந்தக் தகவலும் இல்லை. டிசம்பர் 14 அன்றே மிகக் கனமழை பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடத் தொடங்கின, டிசம்பர் 17 ஆம் தேதி பிற்பகலில் மட்டுமே பெருமழை தொடங்கிய பிறகு தென் மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.