’எந்த உடை பிடிக்கிறதோ அணியுங்கள்; கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை நீக்கம்’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி
ஆடை, மொழி, சாதி அடிப்படையில் மக்களையும் சமுதாயத்தையும் பிரிக்கும் வேலையை பாஜக செய்கிறது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் மீதான தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் மீதான தடையை நீக்குவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில், கடந்த 2022ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இது இரண்டு சமூகத்துக்கு இடையே மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. தொடர்ந்து பாஜக அரசு ஹிஜாபுக்குத் தடை விதிப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது.
இந்த நிலையில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் மீதான தடையை நீக்குவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’ஆடை, மொழி, சாதி அடிப்படையில் மக்களையும் சமுதாயத்தையும் பிரிக்கும் வேலையை பாஜக செய்கிறது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் மீதான தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
உங்களுக்குப் பிடித்ததை உண்ணுங்கள். உங்களுக்குப் பிடித்த உடையை உடுத்துங்கள். அவை குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இதில் நாங்கள் எந்த அரசியலும் செய்யவில்லை. வாக்குகளுக்காகவும் எதையும் செய்யவில்லை.’’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ಪ್ರಧಾನಿ @narendramodi ಅವರ ಸಬ್ ಕಾ ಸಾಥ್-ಸಬ್ ಕಾ ವಿಕಾಸ್ ಎನ್ನುವುದು ಬೋಗಸ್. ಬಟ್ಟೆ, ಉಡುಪು, ಜಾತಿ, ಆಧಾರದ ಮೇಲೆ ಜನರನ್ನು ವಿಭಜಿಸುವ, ಸಮಾಜವನ್ನು ಒಡೆಯುವ ಕೆಲಸವನ್ನು @BJP4India ಮಾಡುತ್ತಿದೆ. ಹಿಜಾಬ್ ನಿಷೇಧವನ್ನು ವಾಪಾಸ್ ಪಡೆಯಲು ತಿಳಿಸಿದ್ದೇನೆ.#Hijab pic.twitter.com/EIHU5V7zas
— Siddaramaiah (@siddaramaiah) December 22, 2023
முன்னதாக 2022ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று பாஜக தலைமையிலான அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதுவும் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.