News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

kolapasi Series 13 | திருநெல்வேலி திருபாகம் முதல் கடையம் வத்தல் குழம்பு வரை - தாமிரபரணி கரையோர பயணம்

''தின்னவேலி என்றாலே அல்வா என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் வெளியூர்க்காரர் என்று அர்த்தம். திருநெல்வேலி என்றால் என் மனதில் உதிக்கும்  முதல் வார்த்தை சொதி''

FOLLOW US: 
Share:

மூங்கில் நெல்லால் பசியைப் போக்கிய ஊர் என்பதால் நெல்வேலி என்கிற பெயர் வழங்கப்பட்ட இந்த ஊர் பின்னர் புராணக் கதைகளுடன் இணைக்கப்பட்டு திருநெல்வேலியாக பெயர் மாற்றம் பெற்றது என்பது வரலாறு. திருநெல்வேலி என்றாலும் உள்ளூர்க்காரர்களுக்கு அது என்றும் நெல்லை தான். திருநெல்வேலி பாண்டிய அரசர்கள், இராசேந்திர சோழன், விசயநகர மன்னர்கள், பாளையக்காரர்கள்,  சந்தா சாகிப், ஆற்காடு நவாப்,  மருதநாயகம், போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர்கள்,  பிரிட்டிசார் என பல்வேறு ஆட்சி மாற்றங்களை வரலாறு நெடுகிலும் கண்டது. ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகளில் தமிழர்களின் பழங்கால நாகரீகங்கள் குறித்த மிகத்துள்ளியமான சித்திரம் கிடைத்தது. தமிழர்கள் வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்கு கிடைத்த பொருட்களின் மூலம் உணரமுடிந்தது. உணவு தானியங்கள் சேமிக்கும் கொள்கலன்களும் அதில் அரிசியும் தானியங்களும் அகழாய்வில் கிடைத்துள்ளது. இரும்புக் காலத்திலேயே இங்கு அரிசி விளைந்துள்ளது என்பது அதில் உறுதி செய்யப்பட்டது.

கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- kolapasi Series 12 | ஆமைக்கறியின் அமைவிடம்; பரோட்டாவின் பிறப்பிடம் - தூள் கிளப்பும் தூத்துக்குடி உணவு பயணம்

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள், இதில் பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கப்படுகிறது. நெல்லைச் சீமை முழுவதுமே உணவு சுவையாக இருக்கும், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவு தனித்த அடையாளத்துடன் கிடைக்கும். வெளியூர்க்காரர்களுக்கு திருநெல்வேலி ஆனால் உள்ளூர்காரர்களுக்கு அது தின்னவேலி. தின்னவேலி என்றாலே அல்வா என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் வெளியூர்க்காரர் என்று அர்த்தம். திருநெல்வேலி என்றால் என் மனதில் உதிக்கும்  முதல் வார்த்தை சொதி. சொதி என்று சொல்லும் போதே அந்த இளம் மஞ்சள் நிறமும் கமகமக்கும் வாசனையும் என் மூக்கை சற்றே வந்தடைகிறது. திருநெல்வேலியில் இருந்து தெற்கே, அப்படியே தென் கேரளா மற்றும் வட இலங்கை தான் சொதியின் தாயகம். இந்தப் பகுதிகளில் எங்கு சென்றாலும் சொதியும் சம்பலும் மறவாதீர்கள். சொதியுடன் நெத்திலி தான் என் காம்பினேசன், நீங்கள் சைவம் என்றால் அவியல் உங்களுக்கு பக்கத் துணையாக இருக்கும்.

கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 11| பதநீர் ஊற்றி செய்யப்படும் சர்க்கரை பொங்கல்.. நாவை சப்பு கொட்ட வைக்கும் நாஞ்சில் நாட்டு பயணம்

நெல்லை கிராமங்களில் வரகு உளுந்துச் சோறு, உளுந்தம் பருப்புச் சோறு, உளுந்தங் களி, எள்ளு துவையல், புளியில்லா குழம்பு, புளித்தண்ணி, புளி மிளகாய், நார்த்தங்காய் பச்சடி, இஞ்சிப் பச்சடி, இஞ்சித் துவையல், வாழைக்காய் புட்டு என பல விதமான உணவுகள் தனித்த ருசியுடன் கிடைக்கும். சைவப் பலகாரங்கள் செய்வதில் இந்தப் பகுதி தேர்ந்தது.  வள்ளியூர் என்றால் முறுக்கு, கல்லிடைக்குறிச்சி அப்பளம், அம்பாசமுத்திரம் கை முறுக்கு, பாபநாசம் கார வடை என ஒவ்வொரு ஊரிலும் ஒரு கைப்பக்குவம். நெல்லை பகுதியில் சாம்பார் மற்றும் ரசம் அடுப்பில் இருந்து இறக்கியதும் ஒரு வெள்ளக்கட்டியை போட்டு மூடிவைக்கும் பழக்கம் உள்ளதை பார்த்திருக்கிறேன். சாம்பார் பொடி இல்லாமல் தினசரி அரைத்து வைக்கும் சாம்பார் செய்யும் முறையா,  அந்த வெள்ளக்கட்டியா அல்லது தாமிரபரணி தண்ணீரா எது என்று எல்லாம் தெரியாது ஆனால் திருநெல்வேலி சாம்பார், ரசத்தில் உள்ள ருசி வேறு ஊர்களில் கிடையாது, கமகமக்கும் ருசி.


திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் சிந்தாமணி, மூலக்கரைப்பட்டி, முனஞ்சிப்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான் தமிழகம் முழுவதும் உள்ள அசோக் பவன், ஆரிய பவன், சரவண பவன் என எல்லா ஊர்களிலும் சைவ, அசைவ உணவகங்களை நடத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டைக் கடந்து இயங்கும் சந்திர விலாஸ் ஹோட்டலின் சாம்பார், ரசம், இட்லி, தோசை, மிளகாய் சட்டினி என அனைத்தும் அற்புதமான ஒரு ருசி. அதே போல் நூற்றாண்டைக் கடந்து இயங்கும் விஞ்சை விலாஸ் ஹோட்டலில் தக்காளி ஊத்தாப்பம் அலாதியான ருசி. விஞ்சை விலாஸில் கிடைக்கும் நன்னாரிப் பாலின் ருசியில் பொதிகையின் மனம் வீசும், நன்னாரிப் பாலை நான் இந்தக் கடை தவிர்த்து தமிழகத்தில் எங்கும் அருந்தியதில்லை.

கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-Kolapasi Series 10 | உணவு பிரியர்களின் சங்கமம் சேலம் - ராக்கெட் ரோஸ்ட் முதல் அணுகுண்டு சாப்ஸ் வரை...!

ஹைகிரவுண்டு மதுரத்திலும் ஹைரோடு முத்து மெஸிலும் சொதி பிரமாதமாக இருக்கும்,  அதே போல் முத்து மெஸில் புதினா தோசை, பெப்பர் சீஸ் தோசை, வாழைப் பூ ஊத்தாப்பம் என எல்லாம் பக்குவமான கைகளின் கைவண்ணமாக இருக்கும். டவுனில் லாலா சத்திர முக்கில் விசாகா பவன், வாகையடி முக்கில் உள்ள ரகுவிலாஸ் எல்லாம் கூட்டம் அலைமோதி நான் பார்த்திருக்கிறேன். சந்திப்பிள்ளையார் கோவில் முக்கில் இருந்த போத்தி என்கிற அற்புதமான உணவகம் இன்று இல்லை, அதன் நினைவுகள் மட்டும் மனதில் நிழலாடுகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள மாலை உணவகம், அந்தக் கடையின் பெயரே மாலை உணவகம் தான், அங்கு இடம் கிடைப்பதுவே கொஞ்சம் சிரமம் தான், ஆனால் தரமான ருசியான உணவு வேண்டும் எனில் அங்கே நீங்கள் காத்து நிற்க வேண்டும் என்பது ருசியின் விதிகளில் ஒன்று.


தெற்கு ரத வீதியில் மாரியம்மன் விலாஸ் கடையில் கிடைக்கும் திருபாகம் நெல்லையின் அடையாளமான உணவுகளில் ஒன்று. பால்கோவா போன்ற பதத்தில் இருக்கும் ஒரு வித்தியாசமான பண்டம், இன்று திருபாகம் பல சுவை, ருசிகளில் கிடைக்கிறது. அதே போல் டவுனில் சுவாமி சன்னதியில் இருக்கும் மணி பால் கடை, விசாகா பவன் அருகில் ஒரு பால் கடை இரண்டும் புகழ்பெற்ற கடைகள். பாரதியார்-செல்லம்மாள் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த கடையத்தில் ஒரு சிறிய சைவ உணவகம் உள்ளது, பெயர் நினைவில் இல்லை. மதியம் ஆகிவிட்டால் சுத்துப்பட்டு மக்கள் எல்லாம் கடையம் நோக்கி படையெடுப்பார்கள். சாணம் மெழுகிய தரையில் இலை போட்டு சாப்பாடு, இந்த கடையின் வத்தல் குழம்பு கிடைக்கவில்லை என்று பஸ் மறியல் மட்டும் தான் இன்னும் நடக்கவில்லை.


நெல்லை ஜங்ஷன் அருகில் இருக்கும் ராஜஸ்தான் ஹோட்டலுக்கு நான் பல முறை சென்றிருக்கிறேன். இந்தக் கடைக்கு இந்த வட்டாரத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு, அதன் ருசிக்கு சாப்பிட்டு சாப்பிட்டு கடனாளி ஆனவர்கள் உண்டு என்றால்  யூகித்துக் கொள்ளுங்கள். திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள ஆரியாஸ், ஜானகிராமன் திருநெல்வேலி டவுனில் உள்ள சரவண பவன் இந்த ஊரின் அடையாளங்களாகவே மாறிவிட்டன. தச்சநல்லூர் ரவுண்டானாவில் உள்ள நெல்லுச்சோறு, வண்ணாரப்பேட்டையில் உள்ள வைர மாளிகை, பெருமாள்புரம் நம்ம வீட்டுச் சமையல், அண்ணாச்சி ஹோட்டல், காசி விலாஸ் ஹோட்டல், ஆஎம்கேவி எதிரில் உள்ள ஆச்சீஸ், கழுவேற்றி முடுக்கு தெருவில் உள்ள மனோகரா ஹோட்டல், காசி விலாஸ், ஜெயவிலாஸ் ஹோட்டல்  என திருநெல்வேலியில் அசைவ உணவகங்களுக்குக் குறைவேயில்லை. வைர மாளிகையில்  நெய்ச் சோறு, பிரியாணி, பரோட்டாவுடன்  நாட்டுக் கோழி கடுகு  மசால், மட்டன் சுக்கா, நெத்திலி ஃப்ரை என பட்டியல் தாமிரபரணி போலவே நீண்டு செல்லும்.  என்.எஸ்.கே பிரியாணி ஹோட்டலில் மண்பானை தம் பரோட்டா என்கிற ஒரு புதிய ஐட்டம் கிடைக்கிறது, இதுவும் நான் வேறு எங்கும் கேள்விப்படாத புதிய செய்முறை.

கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola Pasi Series-5 | தஞ்சை தரணியின் சாப்பாடும்...! சாம்பாரின் கதையும்...!

திருநெல்வேலியில் மாயாண்டி விலாஸ் ஹோட்டலில் நூறு ரூபாய்க்கு அசைவச் சாப்பாடு.  ரத்தப் பொறியல்,  குடல், சுக்கா வருவல், அவித்த முட்டை, எலும்புக் குழம்பு, ரசம், மோர் உள்ளிட்ட முழுச் சாப்பாடும் நூறு ரூபாய் மட்டுமே, இது நிச்சயம் ஆச்சரியம் ஆனால் உண்மை என்பதை அங்கு சென்றால் உணருவீர்கள். சமீபத்தில் திருநெல்வேலி ஈரானி ரெஸ்டாரண்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே   ஆப்பம், இடியாப்பம்,  மட்டன் சொதி, சில்லி பீஃப், குழி மந்தி என பல வண்ணமயமான உணவுகள் கிடைக்கிறது. இந்தக் கடையில் பத்திரியும் கிடைத்தது. நாகர் கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி எங்கும் மாட்டிறைச்சி வகைகள் அற்புதமாக கிடைக்கும். கேரளா போலவே மிகுந்த ருசியான செய்முறையில் பீஃப் பிரியாணி, பீஃப் சுக்கா கிடைக்கும்.

மேலப்பாளையம் பிரியாணிக்கு பேமஸ் ஆனால் இந்த ஊரில் செய்யப்படும் மருந்துச் சோறு தான் இந்த இடத்தின் புவி சார் உணவு எனலாம். அதே போல் இந்தப் பகுதியில் கிடைக்கும்  சேமியா பிரியாணியும் அவசியம் சுவைக்க வேண்டிய ஒரு உணவு. திருநெல்வேலியில் தக்கடியை மறவாமல் ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள். மட்டன் தக்கடி, மாட்டிறைச்சி தக்கடி என பல தக்கடிகள் கிடைக்கும், இதே தக்கடியை கொஞ்சம் வித்தியாசமான செய்முறையில் நான் என் இலங்கை பயணத்தில் சாப்பிட்டிருக்கிறேன். மசாலா தக்கடி எனும் சைவத் தக்கடியும் வீடுகளில் செய்கிறார்கள். தக்கடி  வேறு எங்கும் கிடைக்காத ஒரு must try dish.

பொதிகை மலைகளில் உள்ள காணி பழங்குடி மக்கள் வனத்தில் சேகரிக்கும் பொருட்களை நீங்கள் திருநெல்வேலியில் வாங்கலாம்.  அத்தி, காய்ந்த நெல்லி, கொடம்புலி, காந்தாரி மிளகாய், மரவள்ளி, சுண்டக்காய்,  உலர்த்திய பலா சிப்ஸ், தேன், எலுமிச்சை, நெல்லிக்காய், மிளகு, மருத்துவ குணமிக்க பச்சிலைகள், மூலிகைகள் திருநெல்வேலி டவுனில் காணி பழங்குடியினர் வாழ்வியல் அங்காடியில் நீங்கள் வாங்கலாம். திருநெல்வேலிக்கு வந்துட்டு அல்வா சாப்பிடாமல் கிளம்ப முடியாது, வரிசையில் நின்று இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்டதும் தான் பயணம் நிறைவு பெறும், ஒரு இனிப்பு சாப்பிட்டதும் கைநீட்டினால் கொஞ்ச காரம் இலவசமாக தருகிற கலாச்சாரம் நெல்லையில் இருந்து தான் பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola Pasi Series-1 | தமிழக உணவுலகில் ஒரு உலா

நான் திருநெல்வேலி செல்லும் போது எல்லாம் இரண்டு ஹோட்டல்களில் இருவரை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்புவேன். ஒன்று கல்யாணசுந்தரம் இவர் ஒரு கல்லூரியில் நூலகர் தன் வருமானம் முழுவதையும் ஏழ்மையில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்குக் கொடுத்துள்ளார். இவரது சேவையை பாராட்டி உலகம் முழுவதும் இருந்து விருதுகளும் பரிசு மழையும் பொழிந்தது.  தன் வாழ்வில் இதுவரை ரூ.30 கோடியை இப்படி தன்னைச் சுற்றியுள்ள குழந்தைகளின் கல்விக்குக் கொடுத்துள்ளார்.

தான் நூலகராக பணிபுரியும் காலத்தில் கூட சம்பளமாக வரும் தொகையை இவர் தனக்காக செலவிட்டதில்லை, அதை அப்படியே பகிர்ந்து கொடுத்து விட்டு தன் வாழ்வியல் தேவைகளுக்கும் உணவுத் தேவைக்காகவும் தினசரி மாலை ஹோட்டல் ஆரியாஸில் சர்வராக வேலை செய்தார், அவர் முகத்தை பார்க்கவே ஹோட்டல் ஆரியாஸுக்கு செல்வேன் அவருக்கு ஒதுக்கப்பட்ட மேசையில் இடம் கிடைக்கும் வரை காத்திருந்து அமருவேன். அவர் பரிமாறும் போது தண்ணீரும் கூட அப்படி மணக்கும், ருசிக்கும். அடுத்தபடியாக என் நெல்லை பயணம் நாங்கள் சார்வாள் என்று அன்புடன் அழைக்கும் எழுத்தாளர் கிருஷி அவர்களைச் சந்திக்காமல் நிறைவடையாது, கிருஷி நெல்லை வரும் அனைவருக்கும் ஹோட்டல் ஜானகிராமனில் சுடச்சுட இட்லி வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைப்பார்.  நெல்லை மனிதர்களின் ரசவாதமும் இந்த ருசிக்கு காரணம், உணவு தரும் நிறைவில் ருசி பாதி எனில் மனம் தானே இன்னொரு பாதி.

Published at : 28 Jan 2022 11:15 AM (IST) Tags: nellai tirunelveli saravana bhavan Tamiraparani Kolapasi Thinnaveli Sothi Kulambu Melappalayam Biryani

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு

Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு

Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?

T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!