'இரவு 10 மணிக்கு மேல் தூங்க சென்றால் இதய நோய் ஆபத்து' சமீபத்திய ஐரோப்பிய ஆய்வில் தகவல்!
இரவில் 10 மணிக்கு முன்னதாக உறங்க சென்றவர்களுக்கு இதய பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக சமீபத்தில் செய்யப்பட்ட ஐரோப்பா ஹார்ட் இதழில் இருதய நோய் தொடர்பான ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.
இரவில் நேரமாக படுக்கைக்குச் சென்று அதிகாலையில் எழ வேண்டும் என பாரம்பரியமாக சொல்லப்படுவதுண்டு. அந்த பழமொழியை உறுதி செய்யும் விதமாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் உள்ளன. குறிப்பாக, இரவு நேரங்களில் சீக்கிரம் படுக்கைக்கு சென்று காலையில் நேரமாக எழுந்தால் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஐரோப்பா ஹார்ட் இதழில் இருதய நோய் தொடர்பான ஆய்வு வெளியிடப்பட்டிருக்கிறது. சரியான தூக்கம் மற்றும் இருதய நோய்களுக்கும் இடையிலான தொடர்பை மையமாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்காக, 88,026 பங்கேற்பாளர்களின் தூக்க நேரங்கள் (Sleeping on Time) மற்றும் விழித்திருக்கும் நேரங்கள் குறித்த தரவுகள் ஏழு நாட்களுக்கு சேகரிக்கப்பட்டன. பின்னர் அவர்களின் இருதய ஆரோக்கியம் ஏழு ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 3,172 பேர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டனர். 10 மணிக்கு முன்னதாக தூங்குபவர்களுக்கு இதய பாதிப்பு என்பது வெகு குறைவாக மட்டுமே இருந்துள்ளது. 11 மணிக்கு பிறகு தூங்கச் சென்றவர்கள் பெரும்பாலும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகமானோர் இதய பாதிப்புகளை எதிர்கொண்டதும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிலவற்றிலும், தூக்க ஆரோக்கியம் என்பது உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பிற இதய நோய்களுடன் தொடர்பு இருப்பதை உறுதி செய்திருந்தது. இந்த ஆய்வும் அதற்கு வலுசேர்க்கும் விதமாக, அதன் முடிவுகள் அமைந்துள்ளன. ஆய்வில் பங்கேற்ற மருத்துவர் டேவிட் பிளான்ஸ் பேசும்போது, முன்னதாக அல்லது நீண்ட தாமதமான உறக்கம் உடல் கடிகாரத்தை சீர்குலைக்கும் எனக் கூறினார். இது இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதை உணர முடிந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
மருத்துவர் டேவிட் பிளான்ஸ், "இதய நோய் பாதிப்பு மற்றும் தூக்க ஆரோக்கியம் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். இதில் பங்கேற்பாளர்களிடம் கிடைத்த முடிவுகளை ஆய்வுக்குட்படுத்தியபோது முன்கூட்டியே உறங்குதல் அல்லது தாமதமான உறக்கம் உடல் கடிகாரத்தை சீர்குலைக்கிறது. இது இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதை உணர முடிந்தது" எனத் தெரிவித்தார். பொதுவாக தெற்காசியர்கள் மற்றும் இந்தியர்களிடையே இதய பாதிப்புகள் அதிகம் இருப்பதாக இந்திய இருதய சங்கம் கூறுகிறது. குறிப்பாக இந்தியர்களுக்கு, உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகம் எனத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, மரபணுக்கள், சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், நொறுக்குத் தீனிகள், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை முக்கிய காரிணகள் எனத் தெரிவிக்கிறது. அண்மையில், பிரபல நடிகர் புனித் ராஜ்குமார், கிரிக்கெட் வீரர் அவி பரோட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் சுக்லா ஆகியோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு விவாதத்துக்கு வித்திட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )