நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்! கொடூர வெயிலை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ்!
கோடை வந்துவிட்டால் போதும் வெப்பம் சார்ந்த நோய்களுக்கும் குறைவிருக்காது. எப்படி சமாளிக்கலாம்?
கோடை வந்துவிட்டால் போதும் வெப்பம் சார்ந்த நோய்களுக்கும் குறைவிருக்காது. கடும் குளிரைக் கூட ஸ்வெட்டரைப் போட்டு சமாளிக்கும் வயதானோரும், குழந்தைகளும் கோடையில் வெளியேயும் செல்ல முடியாமல், வீட்டினுள்ளேயே முடங்க முடியாமல் தவிக்கும் தவிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
கோடை வெயிலில் நம் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். அதற்காக அதிகமாக மெனிக்கடத் தேவையில்லை. சில அடிப்படை வாழ்க்கை முறையின் மூலமே கொளுத்தும் கோடையை சமாளிக்கலாம்.
தண்ணீர் அருந்துவதை அதிகமாக்குங்கள்:
கோடை காலத்தில் உடலின் நீர்ச்சத்து மிக வேகமாக குறைந்து விடும். இதனால் காய்ச்சல் வரலாம். கோடை காய்ச்சல் கொடுமையானது. ஆகையால் எப்போதும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள நிறைய தண்ணீர் அருந்துங்கள். உங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது ஒருநாளில் பருகுங்கள்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
கோடை காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக் கூடும். அவ்வாறாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வயதானவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வயது ஏற ஏற வெப்பநிலையை சமாளிக்கும் திறன் உடலில் குறைந்துவிடும். இதுவே வயதானவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக் காரணமாக உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக்கால் காய்ச்சல், மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, தலைவலி, தலைசுற்று ஆகியன ஏற்படலாம்.
ஆடையிலும் கவனம் தேவை..
இந்தக் கோடையில் ஆடையிலும் கவனம் செலுத்துங்கள். தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். எடை குறைவான ஆடைகளை அணியுங்கள். பருத்தி அல்லது லினன் தான் கோடைக்கு உகந்தது.
வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்..
அவசியமின்றி முதியவர்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் உலா வரும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவசியமான வேலைகளை காலை 11 மணிக்கு முன்னதாகவும் இல்லையேல் மாலை 5 மணிக்குப் பின்னரும் மேற்கொள்ளலாம்.
எளிமையான உணவை உட்கொள்ளுங்கள்..
எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். குறைவாக அடிக்கடி சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவை தவிர்க்கலாம். கொழுப்பு நிறை உணவையும் தவிர்க்கலாம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் அதிக நாட்டம் கொள்ளுங்கள் கோடை சுகமாக இருக்கும். அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி ஆகியனவற்றை சாப்பிடுங்கள்.
கண்களைப் பாதுகாக்கவும்..
உங்கள் கண்களை கடும் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். கடுமையான சூரிய ஒளி கண்ணில் நேரடியாக படாதபடி கண்ணில் கருப்புக் கண்ணாடி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவை 99% புற ஊதாக் கதிர் கண்ணில் படுவதைத் தவிர்க்கும்.
கோடையில் மதுவும், கஃபைனும் வேண்டாமே..
கோடைக் காலத்தில் மதுவும், காப்பி, டீ போன்ற பானங்களை முற்றிலுமாக புறக்கணிப்பது நல்லது. ஒருவேளை தவிர்க்க முடியாத சூழல் என்றால் வெகுக் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். பச்சைத் தண்ணீராகக் குடிப்பது பிடிக்காமல் டீ, காபி பருகுகிறோம் எனக் கூறுபவர்கள், சீரகத் தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், புதினா தண்ணீர் என ஃப்ளேவர்ட் தண்ணீரைப் பருகலாம்
இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதும் மிக அழகாக கோடையை சமாளித்துவிடலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )