Manjummal Boys: குடிப்பொறுக்கிகளை கொண்டாடும் நம்மூர் அரைவேக்காடுகள்; மஞ்சும்மல் பாய்ஸை வறுத்தெடுத்த ஜெயமோகன்!
எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் சில உட்கார்ந்து பார்க்க முடியாத சலிப்பூட்டும் போலிப் படைப்புகள். மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் எளிய விமர்சகர்கூட கேள்வி எழுப்பியிருப்பார்கள்.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் கமல் நடித்த குணா படமும், கொடைக்கானலில் உள்ள குணா குகையும் இடம் பெற்றுள்ளதால் தமிழ்நாட்டிலும் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமாவும் கொண்டாடி வரும் நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் மஞ்சும்மல் பாய்ஸ் படம் பற்றி கடுமையான விமர்சனம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில், “சமகால சினிமாவில் நானும் இருப்பதால் விமர்சனமோ, கருத்தோ சொல்வதில்லை. புகழ் மொழிகள், வாழ்த்துகள் உள்ளிட்டவை வழியாக மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள படத்தை பார்க்க நேர்ந்தது.
எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் சில உட்கார்ந்து பார்க்க முடியாத சலிப்பூட்டும் போலிப் படைப்புகள். மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் எளிய விமர்சகர்கூட கேள்வி எழுப்பியிருப்பார்கள். அதாவது தமிழ் நாளிதழ்களில் வெளியான அவ்வளவு பெரிய இடர், வீர சாதனை கேரளாவில் உள்ள அந்த ஊர்காரர்களுக்கு தெரியாமல் இருந்தது, மஞ்சும்மல் பையன்கள் ஊரில் சொல்லவே இல்லையா?. இது கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. இதனை மலையாள படத்தில் மட்டும் ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள்.
மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. அதில் காட்டுவது புனைவு அல்ல. தென்னக்கத்தில் சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அதே மனநிலைதான் உள்ளது. குடிகுடிகுடி, வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது. ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் குடிகாரர்கள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள்.
ஐயமிருந்தால் அந்த சாலைகளில் எல்லாம் சென்று பாருங்கள். அதையும் பெருமையாக இப்படத்தில் காட்டுவார்கள். பலமுறை அவர்களுடன் சண்டைக்கு சென்றிருக்கிறோம். இந்த உடைந்த புட்டிகளால் ஆண்டுக்கு 20 யானைகளாவது கால் அழுகி இறக்கின்றது. அதை கண்டித்து நான் கொதித்துபோய் எழுதிய யானை டாக்டர் புத்தகம் மலையாளத்திலும் பல லட்சம் பிரதி விற்றுள்ளது. படத்தின் இயக்குநர் அதை வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. அவரும் இந்த குடிப்பொறுக்கிகளில் ஒருவராக இருக்கவே வாய்ப்புள்ளது.
இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில் சொல்வார்கள். ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்னும் தெனாவெட்டு இருக்கும். இந்த படத்தில் தமிழகப் போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை” என எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.