(Source: ECI/ABP News/ABP Majha)
ABP நாடு Exclusive: ‛அதை உடைக்கணும்... அதான் வந்தேன்....’ ‛லேடி தல’ நிவேதா பெத்துராஜ் சிறப்பு பேட்டி!
‛‛என்னோட அப்பா, ட்ராக்ல ஏன் இவ்வளவு ஸ்லோவா கார் ஓட்ற.. நானா இருந்தா இத விட வேகமாக ஓட்டுவேன்னு சொன்னார். அப்பாவோட அந்த ரியாக்ஷன் எனக்குதான் ஷாக்கா இருந்துச்சு...’’
கொஞ்சும் முகபாவம், ஆடைக்கேற்ற அணிகலன், புன்னகையில் அலாரம், உதட்டோரம் ஊஞ்சல் என தமிழ் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துக் கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் ‘ஒருநாள் கூத்து’, பொதுவாக எம்மனசு தங்கம்’ ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதைக்கடந்து கதையோடு கலந்து செல்லும் ஆற்றல் கொண்டவர். முக அழகு, உடல் கவனம் என பொதுவாக நடிகைகள் தவிர்க்கும் சிலவற்றை, இவரை தேர்வு செய்து, அண்மையில் தனியார் ரேஸிங் பயிற்சி மையத்தில் கலந்து கொண்டு Formula Race Car Level 1 பயிற்சியை முடித்திருக்கிறார். ‛லேடி தல’ என இவரை இணையத்தில் ஒரு தரப்பு கொண்டாடிக்கொண்டிருக்கிறது. சினிமா, ரேஸ் என காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு பயணிக்கும் நிவேதாவை, ABP நாடு டிஜிட்டலுக்காக பேட்டி கண்டோம்... இனி நிவேதாவின் நிமிடங்கள்....
கார்கள் மீதான பிரியம் எப்போது தொடங்கியது?
நான் அப்போ 8 ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். துபாய்ல நாங்க இருந்த வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒருத்தங்க ஸ்போர்ட்ஸ் கார் வாங்கினாங்க.. அப்போ இருந்துதான் எனக்கு கார்கள் மீதான கிரேஸ் அதிகமாச்சு..
உங்க ஃபேமிலியோட ரியாக்ஷன் என்னவா இருந்துச்சு.. அவங்க பயப்படலயா?
இல்ல பயப்படல.. ரொம்ப சப்போர்டிவா இருந்தாங்க.. குறிப்பா, என்னோட அப்பா ட்ராக்ல ஏன் இவ்வளவு ஸ்லோவா கார் ஓட்ற.. நானா இருந்தா இத விட வேகமாக ஓட்டுவேன் என்றார்.. அப்பாவோட அந்த ரியாக்ஷன் எனக்குதான் ஷாக்கா இருந்துச்சு..
இந்த போட்டிகள் ஆண்களுக்கானதாக பார்க்கப்படுகிறதே?
ஆமா அது ஏன்னு தெரியல.... கொஞ்சம் கடினமான போட்டிகள் அப்படினாலே ஆண்கள் மட்டும்தான் நினைவுக்கு வர்றாங்க.. அத உடைக்கணும். பார்முலா 1 ,பார்முலா 2 கார் பந்தயங்கள் பெண்களுக்கும் வரனும். இங்க நிறைய திறமையான பெண்கள் இருக்காங்க..
இதில், பெண்ணாக ஏதாவது பிரச்னையை சந்திக்கீறீர்களா?
ஒன்னுமே இல்ல.. இன்னும் சொல்ல போனால் பெண்களுக்குதான் அதிக அட்வான்டேஜ்.. காரணம் பெண்களுக்கு அதிகமான ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பாங்க. இதற்கு 30 சதவீத ஃபிட்னஸ் போதுமானது. வெயிட் 60 கிலோ டூ 65 இருக்கனும்.. என்னோட வெயிட் எக்ஸாக்ட் 60. அதனால பிரச்னை இல்ல
திரை பிரபலங்கள் யாரெல்லாம் அழைத்து வாழ்த்து தெரிவிச்சாங்க?
சினிமாவில் எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது.. அதனால் யாரும் என்னை அழைக்கவில்லை..
வரும் காலத்தில் கார் பந்தய போட்டிகளில் பங்கு பெறுவீர்களா?
நிச்சயமாக....
டிக் டிக் டிக் படத்தில் வானில் பறந்த போது இல்லாத பிரமிப்பு, இன்று காரில் பறக்கும் போது நமக்கு வருகிறது. திரையில் பார்த்த கிளி, தரையில் பறக்கும் போது பாராட்டாமல் இருக்க முடியுமா? உங்கள் சார்பில் நாமும் வாழ்த்தி விடைபெற்றோம்.