Leo Booking: ‘லியோ படத்திற்கு இதுதான் பிரச்சினையா?’ .. முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்காமல் இருக்க காரணம்..!
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்னும் பல தியேட்டர்களில் தொடங்கப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த குழப்பமடைந்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்னும் பல தியேட்டர்களில் தொடங்கப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த குழப்பமடைந்துள்ளனர்.
இன்னும் 3 தினங்களில் தீபாவளி
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் “லியோ”. மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படத்தில் த்ரிஷா,அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் ஆகியவை கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியானது. முதல் பாடலான “நான் ரெடி” பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. படம் ரிலீசாகும் நாள் தான் தங்களுக்கு தீபாவளி என மிகுந்த ஆர்வத்தோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லியோவை சுற்றிய சர்ச்சை
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பல காரணங்களுக்காக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5 ஆம் தேதி லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரே ஒரு கணம் ஆடிப்போயினர். முன்னணி நடிகர் தனது ரசிகர்களை இப்படி கெட்ட வார்த்தை பேசி திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் ட்ரெய்லரில் அந்த வார்த்தை மியூச் செய்யப்பட்டது.
இதன்பின்னர் லியோ படத்துக்கு சிறப்பு காட்சி வழங்கப்படுமா என்ற கேள்வி எழ தொடங்கியது. முதலில் அதிகாலை 4 மற்றும் 7 மணி சிறப்பு காட்சி வழங்கி தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது சர்ச்சையை கிளப்ப, மீண்டும் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் தான் என்றும், காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்றும் அரசு தெளிவுப்படுத்தியது. அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி வரை விடுமுறை தினங்கள் வருவதால் நாள் ஒன்றுக்கு ஒரு சிறப்பு காட்சி மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவில் குழப்பம்
லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆங்காங்கே அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தியேட்டர்களால் தொடங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ரிலீசுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு தொடங்கும் நிலையில், நேற்று வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. முதல் நாள் முதல் காட்சி தவிர்த்து மற்ற காட்சிகள் விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு 80% டிக்கெட்டுகள் காலியாகி விட்ட நிலையில் இன்னும் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது காலை 9.30 மணி தொடங்கி இரவு 1.30 மணிக்குள் காட்சிகளை திரையிட வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது. ஆனால் லியோ படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் 20 நிமிடம் இடைவேளை, ரசிகர்களை உள்ளே அனுமதிப்பது, வெளியேற்றுவது, விளம்பரம் என 20 நிமிடங்கள், காட்சிக்கு ஒருமுறை தியேட்டரை சுத்தம் செய்ய 20 நிமிடங்கள் என கிட்டதட்ட 3 மணி 40 நிமிடங்கள் வரை ஒரு காட்சிக்கு நேரம் செலவழிக்கப்படுகிறது. 16 மணி நேரத்தில் ஒரு காட்சிக்கு 4 மணி நேரம் என வைத்துக் கொண்டால் நாள் ஒன்றுக்கு அந்த நேரத்தில் 4 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும் என்பதால் இதுதொடர்பான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கினால் அரசு சொன்ன நேரத்தில் முடிக்க முடியாது என்பதால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களுக்கு இன்று மதியம் அல்லது நாளைக்குள் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.