Mansoor Ali Khan - Trisha: கடுப்பான த்ரிஷா! வாழ்த்திய மன்சூர்! முடிவுக்கு வந்த ஒரு வார போர்.. ஒரு ரீவைண்ட்..!
ஒருவாரமாக நடைபெற்ற பிரச்சினையில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுள்ளார். ஒருவாரமாக நடைபெற்ற பிரச்சினையில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
சர்ச்சையான பிரஸ்மீட்
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அப்படத்தின் ஹீரோயினான நடிகை த்ரிஷாவுடன் தன்னால் இணைந்து நடிக்க முடியவில்லை என பேசியிருந்தார். இது அந்த சமயத்தில் வேடிக்கையான விஷயமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கடந்த இரு வாரத்துக்கு முன் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஹீரோயினுடனான காட்சியில் வில்லனையே போட மாட்டேன் என்கிறார்கள். த்ரிஷாவுடன் நடிக்க எனக்கு ஆசையாக இருந்தது. கட்டிலில் குஷ்புவை, ரோஜாவை கிடத்தியது போல் த்ரிஷாவையும் போடலாம் என நினைத்தேன்” என அறுவறுப்பான கருத்துகளை தெரிவித்தார். மேலும் 150 படங்களில் நான் செய்யாத பாலியல் வன்முறையா?.. ஆனால் த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை” என பேசியிருந்தார். இந்த வீடியோ ஒரு வாரம் கழித்து கடும் சர்ச்சைகளை சந்திக்க தொடங்கியது.
கடுப்பான த்ரிஷா
சரியாக நவம்பர் 18 ஆம் தேதி த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பிறகு தான் இந்த விவகாரம் வெளியுலகில் பலருக்கும் தெரிந்தது. அந்த பதிவில் மிகவும் கோபத்துடன், “மன்சூர் அலிகான் சமீபத்தில் என்னைப் பற்றி அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இனியும் நடிக்க மாட்டேன்” என சொன்னார். அவரைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மன்சூர் அலிகான் விளக்கமும் விவாதமும்
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் தனது விளக்கத்தை அளித்தார். அதில் த்ரிஷாவிடம் தப்பான வீடியோவை காட்டியதாகவும், தான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்கிற ரீதியிலும் பேசியிருந்தார். இந்த விளக்கம் கடும் விமர்சனம் செய்யப்பட்டது. தன்னுடைய செயலுக்கு வருத்தப்படாமல் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் அவர் பேசியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு தென்னிந்திய நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டது. மறுபுறம் தேசிய மகளிர் ஆணையம் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
கெடு விதித்த மன்சூர் அலிகான்
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய மகளிர் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தார். தன்னிடம் விளக்கம் கேட்காமல் அறிக்கை விட்ட நடிகர் சங்கத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பையை கலவர பூமியாக மாற்றினார். இதனையடுத்து அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று (நவம்பர் 23) ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சொன்ன நிலையில் தனக்கு தொண்டை பிரச்சினை இருப்பதால் முதலில் ஆஜராக அவகாசம் கேட்ட மன்சூர் அலிகான் திடீரென மதியம் மேல் ஆஜரானார்.
இதற்கிடையில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கலும் செய்தார். இப்படியான நிலையில் தான் இன்று த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” என தெரிவித்துள்ளார். இப்படியான த்ரிஷாவுடனான பிரச்சினை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.