Bison : அப்பாவைப் போலவே கடின உழைப்பு... ரிலீஸூக்கு முன்பே பைசன் படத்திற்கு பாராட்டுக்களை அள்ளும் துருவ் விக்ரம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ள நிலையில் துருவ் விக்ரமுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

பைசன்
பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரவேஸ்வரன் , ரஜிஷா விஜயன் , லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
பாராட்டுக்களை அள்ளும் துருவ் விக்ரம்
பரியேறு பெருமாள் , கர்ணன் , மாமன்னன் , வாழை என தனது ஒவ்வொரு படத்திலும் புதிய கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மாரி செல்வராஜ். அந்த வகையில் பைசன் திரைப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பைசன் படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. நேற்று செப்டம்பர் 16 ஆம் தேதி றெக்க றெக்க பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் அறிவு மற்றும் வேடன் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள். இப்பாடலில் துருவ் விக்ரம் கபடி போட்டிக்கு பயிற்சி செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளில் துருவ் விக்ரமின் உடற்தோற்றம் மற்றும் கடின உழைப்பு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் துருவ் விக்ரம். முதலில் பாலா இந்த படத்தை இயக்கி பின் படத்தில் விக்ரமுக்கு திருப்தி இல்லாததால் அவரே இந்த படத்தை இயக்கினார். இந்த பிரச்சனையில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரியளவில் பேசப்படாமல் போனது. தற்போது பைசன் படம் துருவ் விக்ரமுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
அப்பாவைப் போலவே கடின உழைப்பு
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் தனது உடல் எடையை ஏற்றியும் குறைத்தும் இவர் செலுத்தும் உழைப்பு வியக்கத்தக்கது. மற்ற பெரிய ஸ்டார்களைக் காட்டிலும் விக்ரம் இந்த காரணத்தினாலேயே ஒரு படி மேல் மதிக்கப்படுகிறார். தற்போது விக்ரமைப் போலவே அவரது மகனும் மாரி செல்வராஜ் படத்திற்கு தனது முழு உழைப்பையும் கொடுத்திருப்பதை கவனிக்க முடிகிறது. சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.





















