Vijayakanth - Ibrahim Rowther: நட்பின் இலக்கணம்: உளியும் சிலையுமாய் வாழ்ந்த விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் கதை!
Vijayakanth - Ibrahim Rowther: விஜயராஜாவாக இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு படையெடுத்தபோது நண்பனை தனியாக அனுப்ப மனமில்லாமல் அவருடனே கிளம்பி வந்த நண்பர் தான் ராவுத்தர்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்த செய்தி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தொடங்கி லட்சக்கணக்கான சினிமா ரசிகர்கள் வரை பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரசித்திபெற்ற நட்புகளில் ஒன்றான விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் நட்பு பற்றி பார்க்கலாம். கேப்டனின் வாழ்விலும் வளர்ச்சியிலும் முக்கியமான பங்கு வகித்த ஒரு உன்னதமான நண்பர் ராவுத்தர் (Ibrahim Rowther). விஜயராஜாவாக இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு படையெடுத்தபோது நண்பனை தனியாக அனுப்ப மனமில்லாமல் அவருடனே கிளம்பி வந்த நண்பர் தான் ராவுத்தர். நண்பனின் கனவையே தன்னுடைய கனவாக எண்ணி, அதற்காக இருவரும் சேர்ந்து எதிர் கொண்ட கடினமான சூழல்கள் ஏராளம்.
விஜயகாந்த் - ராவுத்தர் நட்பு :
விஜயகாந்த் (Vijayakanth) நடித்த படங்கள் அனைத்தின் கதையையும் கேட்டு எது அவருக்கு சரியான படமாக இருக்கும், வெற்றிப் படமாக அமையுமா என்பதில் தொடங்கி, கால்ஷீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது என அனைத்து வேலைகளையும் ராவுத்தரே கவனித்து வந்தார். விஜயகாந்தின் சினிமா கரியரை வடிவமைத்து மொத்தமாக இயக்கியவர் ராவுத்தர் தான். நண்பனின் பேச்சுக்கு விஜயகாந்த் மறுவார்த்தை பேசியதே கிடையாதாம். அப்படி தனக்கு விருப்பமே இல்லை என்றாலும், ராவுத்தர் சொன்னார் என்பதற்காக நடித்த திரைப்படங்கள் ஏராளம். அதில் ஒன்று தான் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'புலன் விசாரணை' திரைப்படம்.
புலன் விசாரணை நடிக்க காரணம் :
விஜயகாந்த் - ஆர்.கே. செல்வமணி இருவருக்கும் இடையில் ஒத்துப் போகவில்லை என்றாலும் இருவருக்கும் இடையில் சமரசம் செய்து வைத்து 'புலன் விசாரணை' படத்தில் நடிக்க வைத்து இருந்தார் ராவுத்தர். இப்படத்தில் விஜயகாந்த் நடித்தே தீர வேண்டும் என ராவுத்தர் கண்டிஷன் போட ஒரு காரணம் இருந்தது.
விஜயகாந்துக்கு திருமணம் முடிவாகி இருந்தது. அதற்கு முன்னர் அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததால் ஒரு வெற்றிப்படமாவது விஜயகாந்த் கொடுக்க வேண்டும் என நினைத்தார் ராவுத்தர். அவரின் எண்ணம் போலவே புலன் விசாரணை திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் - பிரேமலதா திருமணத்தையும் முடிவு செய்து முடித்து வைத்தவர் ராவுத்தர்.
ஹீரோவாக நடிக்க பிறந்தவன்!
பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் திடீரென ஒரு சரிவு ஏற்பட்ட போது மீண்டும் வறுமை நிலைக்கு சென்றார் விஜயகாந்த். அடுத்த வேலை உணவுக்கு கூட கஷ்டப்படும் அளவுக்கு நிலை மாறியது. அந்த நிலையில் கூட விஜயகாந்துடன் தான் இருந்தார் ராவுத்தர். அப்போது அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முரட்டுக் காளை' படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திற்கான செக்கையும் பெற்றுக்கொண்டார் விஜயகாந்த்.
ஆனால் ராவுத்தரோ விஜயகாந்த் அந்தப் படத்தில் நடிக்கவே கூடாது என விடாப்பிடியாக சொல்லிவிட்டார். “நீ ஹீரோவாகவே நடிக்க பிறந்தவன். எக்காரணம் கொண்டும் வில்லனாக நடிக்கக் கூடாது” என ராவுத்தர் சொல்லியதால் தான் வாங்கிய செக்கை கூட திருப்பி அனுப்பிவிட்டாராம் விஜயகாந்த்.
அணுஅணுவாக செதுக்கியவர் :
விஜயகாந்த் என்ற ஒரு நடிகரை அரசியல் தலைவராக அணுஅணுவாக செதுக்கியதில் முக்கியப்பங்கு வகிப்பவர் ராவுத்தர். தமிழகத்துக்கு ஒரு முதலமைச்சரை உருவாக்குகிறேன் என விஜயகாந்தை வடிவமைத்தவர். அவரின் நடை, உடையை மற்றயதில் இருந்து அவருக்கு கேப்டன் எனப் பெயர் வைத்து வரையில் அவருக்கு ஏற்ற மாதிரி பார்த்து பார்த்து செய்தார். அவருக்காகவே தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஏராளமான படங்களில் விஜயகாந்தை நடிக்க வைத்தார். எங்கே அவர்களின் நட்பில் விரிசல் வந்து விடுமோ என எண்ணி தனக்கென ஒரு திருமண பந்தத்தை கூட ஏற்படுத்திக் கொள்ளாதவர் ராவுத்தர்.
நட்பில் ஏற்பட்ட விரிசல்!
விஜயகாந்தின் திருமணத்திற்கு பிறகு விஜயகாந்த் - ராவுத்தர் நட்பில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட்டது. விஜயகாந்தின் சில அரசியல் நகர்வுகள் ராவுத்தருக்கு பிடிக்காமல் போகவே அங்கும் சில விரிசல்கள் ஏற்பட, ஒரு கட்டத்தில் அவர்கள் நட்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. இப்ராஹிம் ராவுத்தர் ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்தார். எனினும் இறுதிவரை தூரமாக இருந்து ஒருவர் மற்றொருவரின் வளர்ச்சியை கொண்டாடியே வந்தனர். கோலிவுட்டில் நட்பின் இலக்கணமாய் விளங்கிய இவர்களது நட்பு தமிழ் சினிமாவில் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்!