Vijayakanth: 4 நாட்கள் இடைவெளியில் மறைவு.. விஜயகாந்த் - போண்டா மணி இடையே இப்படி ஒரு பந்தமா?
Captain Vijayakanth: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் நிலைகுலைய செய்துள்ளது.
விஜயகாந்த் (Vijayakanth) பற்றி பேசினாலே நான் கண்கலங்கி விடுவேன் என மறைந்த நடிகர் போண்டா மணி தெரிவித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் நிலைகுலைய செய்துள்ளது. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி யாராலும் வெறுக்க மற்றும் மறக்கவே முடியாதவராக திகழ்ந்தார் விஜயகாந்த். அப்படிப்பட்ட நபரின் மரணம் அனைவரையும் நீங்கா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கல், மாநில மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடலானது சென்னை தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வரும் நிலையில், தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை 4.45 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலானது நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இப்படியான நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தார். அவர் ஒரு நேர்காணலில் விஜயகாந்த் பற்றி நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், “விஜயகாந்த் என்றால் எனக்கு உயிர். இன்றைக்கு (அன்றைக்கு) உடல்நிலை சரியில்லாமல் இருப்பது ரொம்ப வருத்தமா இருக்குது. அவரது 25 ஆம் ஆண்டு கல்யாணத்துக்கு வீட்டுக்கு போனப்ப வெளியே அரசியல்வாதிகளில் இருந்து எல்லாரும் சேர்ந்த ஒரு கும்பல் நின்றது. நடிகன்னு நான் ஒருத்தன் காலையிலேயே அவர் வீட்டுல போய் நிக்குறேன். உள்ளே விஜயகாந்திடம் சென்று, வந்தவர்கள் பற்றி மேனேஜர் சொல்லியுள்ளார்.
உடனே, ‘முதல் ஆளாக போண்டா மணியை அனுப்பு’ என விஜயகாந்த் சொல்லியுள்ளார். நானும் சென்று அவரிடம், ‘அண்ணே என்னன்னே இவ்வளவு பேரு வெளியில இருக்காங்க. என்னை கூப்பிட்டு இருக்கீங்க?’ என கேட்டேன். அதற்கு, ‘நீதான்டா என் சகோதரன். நம்ம எல்லாரும் சினிமாவுல இருந்து வந்தவங்க. அவங்க எல்லாரும் இப்ப வந்தவங்க. நீதாண்டா எனக்கு எல்லாம் என சொன்னார்’. மேலும் ரூ.5 ஆயிரம் பணமும் கொடுத்தார். நினைச்சி பார்க்க முடியாத சம்பவம் அது. அவரைப் பற்றி பேசினாலே நான் கண்கலங்கி விடுவேன் என போண்டா மணி அந்த நேர்காணலில் கூறியிருப்பார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: தீவுத்திடலுக்கு எடுத்துச் செல்லப்படும் விஜயகாந்தின் உடல்!