JanaNayagan Censor : ஜனநாயகன் ரிலீஸில் சிக்கல்.. சென்சார் சர்ச்சையில் தீர்ப்பு ஒத்திவைப்பு
JanaNayagan Censor Issue : ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில் தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தணிக்கை குழு பரிந்துரைத்த காட்சிகளை நீக்கியபின்னும் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பும் உரிமை தணிக்கை தலைவருக்கு இருப்பதாக தணிக்கை வாரியம் வாதம் செய்தது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாக இருந்தது. இப்படியான நிலையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியத்திற்கும் படக்குழுவிடையேயும் சர்ச்சை எழுந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இருந்து ஆட்சேபனத்திற்குரிய வசனங்கள் மற்றும் காட்சிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த காட்சிகளை நீக்கினால் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குவதாக தணிக்கை வாரியம் முதலில் தெரிவித்திருந்தது . தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை செய்தபின்னும் படத்திற்கு தணிக்கை சாண்றிதழ் வழங்காமல் மறுதணிக்கைக்கு அனுப்பும்படி இழுத்தடித்து வந்தது தணிக்கை வாரியம்.
இதனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி பிடி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது
தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் கேள்வி
தணிக்கை ஆய்வுக் குழு சொன்ன திருத்தங்களை செய்தபின்னரும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது ஏன் என நீதிபதி தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பினார். மேலும் U/A சான்றிதழ் வழங்குவதாக கூறி படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்
விட்டுக்கொடுக்காத தணிக்கை வாரியம்
ஜனநாயகன் படத்தில் ஆலோசனை இன்றி பாதுகாப்பு படையினர் சின்னங்கள் பயண்படுத்தப்பட்டிருப்பதாக தணிக்கை வாரியம் குற்றம்சாட்டியது. மேலும் தணிக்கை குழுவின் ஆய்வில் திருப்தி இல்லாவிட்டால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தணிக்கை தலைவருக்கு உரிமை உள்ளது என கூறியது. ஒரு படத்தை தணிக்கை செய்ய 15 நாட்கள் தேவைப்படும் . ஜனநாயகன் படத்தை தணிக்கை செய்ய 4 வாரம் அவகாசம் தேவைப்படும் . நாளை மறுநாள் படம் ரிலீஸ் என்று சொல்லி தணிக்கை சான்றிதழ் கேட்க முடியாது என மத்திய அரசு சார்பாக வாதாடப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினரில் ஒருவர் படத்தைப் பற்றி புகாரளித்ததாக கூறினர். ஆனால் தணிக்கை உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கதான் உரிமை உள்ளது என்றும் புகாரளிக்க இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.
நாளை தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். வாதங்கள் அனைத்தையும் இன்றே முன்வைத்துவிட நீதிமன்றம் இருதரப்பினரையும் கேட்டுக்கொண்டது. ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது அதே நாளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே முன்பதிவில் பல கோடி வசூல் செய்துள்ளது ஜன நாயகன் திரைப்படம் . தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன .





















