தக் லைஃப் படத்திற்கு 50 கோடி வாங்கிய சிம்பு...வெற்றிமாறன் படத்திற்கு எவ்வளவோ கேட்டார் தெரியுமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு சம்பள பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

சிம்பு வெற்றிமாறன் கூட்டணி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம் சிம்புவுக்கு கைகொடுக்கவில்லை. அடுத்தடுத்து பல இயக்குநர்களின் படங்களில் சிம்பு நடிக்க இருந்தாலும் , இந்த படங்களின் அறிவிப்பு வெளியாகி பின் படப்பிடிப்பு ஏதோ ஒரு காரணத்தால் தொடங்குவதில்லை. அந்த வகையில் அஸ்வத் மாரிமுத்து , தேசிங்கு பெரியசாமி , பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகிய இயக்குநர்களின் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதனிடையில் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் அறிவிப்பாக வெளியானது சிம்பு வெற்றிமாறன் கூட்டணி.
விடுதலை 2 படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்தபடியாக சிம்புவை நாயகனாக வைத்து படமியக்க இருக்கிறார். வடசென்னை கதையுலகின் ஒரு பகுதியாக இந்த படம் உருவாக இருக்கிறது. வடசென்னை படத்தில் நடித்த பல நடிகர்கள் இந்த படத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் படமாக்கப்பட்டது. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்பு எஸ் தானு இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்க ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் சம்பளம் தொடர்பான பிரச்சனையால் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியது
சிம்புவின் சம்பளம்
தமிழ் சினிமாவின் ரஜினி, கமல் , விஜய் , அஜித் போன்ற முதல் நிலை ஸ்டார் நடிகர்களுக்கு அடுத்தபடியாக சிம்பு , தனுஷ் இருந்து வருகிறார்கள். தொடர் வெற்றிகளுக்குப் பின் தனுஷ் , சிவகார்த்திகேயன் தங்களது சம்பளத்தை உயர்த்தினார்கள். அந்த வகையில் சிம்புவும் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். கடைசியாக வெளியான தக் லைஃப் படத்திற்கு சிம்பு ரூ 50 கோடி சம்பளாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம். தற்போது வெற்றிமாறன் படத்திற்கு சிம்பு ரூ 45 கோடி சம்பளமாக கேட்டதாகவும் இதனால் தயாரிப்பாளர் சிம்பு இடையில் பேச்சுவார்த்தை நீடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பளம் குறித்த பேச்சு சுமுகமாக முடிந்தால் மட்டுமே சிம்பு இப்படத்தில் நடிப்பார் என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் சிம்பு தற்போது தாய்லாந்தில் படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாகவும் வரும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்





















