சிவாஜி மன்னிப்பு கேட்க சொன்னாரு.. நான் விலகிட்டேன் - நினைவுகளை பகிர்ந்த நிர்மலா!
நடிகர் திலகத்துடன் தனக்கு ஏற்பட்ட சின்ன மனவருத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.
நடிகர் திலகத்துடன் தனக்கு ஏற்பட்ட சின்ன மனவருத்தம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. அண்மையில் ஒரு யூடியூப் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியிலிருந்து..
ஊட்டிக்கு சூட்டிங் போயிருந்தேன். கீழே மேட்டுப்பாளையம் வருவதற்குள் ரயில் போய்விட்டது. பெட்ரோல் கிடைக்காததால் தாமதமாகிவிட்டது. அப்றம் திருட்டு பெட்ரோல் போட்டுகிட்டு கோயம்புத்தூர் ரயில் நிலையத்துக்கும் காரிலேயே வந்தேன். ஆனால் கோவை ரயில் நிலையத்திலும் ரயிலை பிடிக்க முடியவில்லை. அப்புறம் லைட்னிங் கால் போட்டு காரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். அப்புறம் ஸ்பாட்டுக்கு வந்து மேக்கப் போட்டுகிட்டு இருந்தேன். சிவகாமியின் சபதம் படத்துக்காக அந்த சூட்டிங்கநடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு உதவியாளர் வந்து சிவாஜி சார் உங்களை கூப்பிடுகிறார் என்றார். ஏன் என்றேன். நீங்கள் அவர்கிட்ட சாரி கேட்டால் தான் அவரோடு நடிக்க முடியுமாம் என்றார்.
நான் எந்த தப்பும் பண்ணலியே. ரயிலை விட்டுவிட்டேன். அதுவும் பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுபோனதால் நடந்தது. இதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒன்றும் சொல்லாமலேயே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். வீட்டுக்குப் போய் தயாரிப்பாளரிடம் நான் இந்தப் படத்தைப் பண்ணவில்லை என்று கூறிவிட்டேன். தப்பு பண்ணினால் சாரி சொல்வேன். தப்பு பண்ணாம சாரி சொல்ல எனக்கு முடியாது. அதே தயாரிப்பாளர் அன்புச் சகோதரர் படத்தில் நடித்திருந்தேன். அதை முடிக்காததால் பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
சிவாஜி சார் ஒரு லெஜண்ட்
அப்புறம் ஒரு விருது நிகழ்ச்சியில் சிவாஜி சாரை பார்த்தேன். அப்போது அந்த விழாவில் அவரே என்னிடம் வந்து பேசினார். அப்போதுதான் நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணேன். சிவாஜி சார் நடிப்பில் ஒரு லெஜண்ட். அவர மாதிரி ஒரு ஆளுமைகிட்ட நான் அன்னிக்கு சாரி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. அவரை அந்த விழாவில் பார்த்தவுடன் நான் குனிந்து கொண்டேன். ஆனால் அவரே என்னை கூப்பிட்டுப் பேசினார். அது எனக்கு ரொம்ப கில்ட்டியா ஆயிடுச்சு. அவர் தான் ஒரு லெஜண்ட் என்பதை மீண்டும் நிரூபித்தார். என்னை அவர் எப்பவுமே டார்லிங் என்று தான் கூப்பிடுவார். அன்றும் அவர் டார்லிங் என்று கூப்பிட்டுதான் பேசினார். பழைய நிகழ்வுகள் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.
ஜெய்சங்கர் ஒரு விளையாட்டுப் பிள்ளை
ஜெய்சங்கருடன் நான் முதலில் நடித்த படம் காதலித்தால் போதுமா. அந்தப் படத்தில் அழுகை சீன் உண்டு. நான் அந்த சீனுக்கு தயாராகி இருக்கும்போது ஜெய்சங்கர் வந்து ஒரு ஜோக் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். நான் அந்தக் காட்சியை நடித்த பின்னர் இயக்குநரோ, அம்மா நீங்க அழுதாலும் அதில் ஒரு சிரிப்பு தெரியுது. எக்ஸ்பிரஸன் மாத்துங்கள் என்பார். ஆனால் என்னால் அது முடியாது. ஜெய்சங்கர் செட்டில் எப்பவுமே இப்படி நாட்டியாக விளையாட்டுப் பிள்ளையாக இருப்பார் என்றார்.