ரசிகர்களே ரெடியா? - ஒருவழியாக ரிலீசுக்கு ரெடியான பார்ட்டி படம்.. எப்போ தெரியுமா?
நடிப்பை கைவிட்டு இயக்குநராக களம் கண்ட வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 பாகம் 2, மன்மத லீலை ஆகிய படங்களை இயக்கினார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி படம் ஒருவழியாக ரிலீசுக்கு தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரானவர் வெங்கட் பிரபு. இயக்குநர் கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு சென்னை - 600028 படம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். அதற்கு முன்னால் உன்னை சரணடைந்தேன் படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில், ஜி, சிவகாசி, நெறஞ்ச மனசு, மழை, வாழ்த்துகள் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.
இதன்பிறகு நடிப்பை கைவிட்டு இயக்குநராக களம் கண்ட அவர் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 பாகம் 2, மன்மத லீலை ஆகிய படங்களை இயக்கினார். இருந்தும் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கிடைக்காமல் இருந்தது. எனினும் வெங்கட்பிரபு படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் திரைக்கதையில் செய்யும் மேஜிக் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
இப்படியான நிலையில் 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யை வைத்து அவர் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கினாலும், வசூல் ரீதியாக சாதனைப் படைத்தது.
பார்ட்டி படம்
இந்த நிலையில் வெங்கட் பிரபு 2018 ஆம் ஆண்டு பார்ட்டி என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், மிர்ச்சி சிவா, நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசாண்ட்ரா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வழக்கமாக வெங்கட் பிரபு படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில் இதில் அவரது சகோதரர் பிரேம்ஜி இசையமைத்தார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதேசமயம் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ரிலீசுக்கு தயாராகும் வகையில் இரண்டு பாடல்கள்,டீசர் வெளியானது. பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததால் மிகப்பெரிய அளவிலான பணத்துடன் தவிக்கும் கும்பலின் கதையாக பார்ட்டி படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருளாதார பிரச்னை காரணமாக இப்படம் ரிலீசாகாமல் உள்ளது. இதனிடையே 7 ஆண்டுகள் ஆகியும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு 12 ஆண்டுகள் கழித்து விஷாலின் மதகஜராஜா படம் வெளியாகி ரூ.100 கோடி வசூலைப் பெற்றது. அப்படியான நிலையில் 7 ஆண்டுகளை கடந்துள்ள பார்ட்டி படத்தை ஓடிடியிலாவது வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இப்படம் 2026 ஆம் ஆண்டு தியேட்டரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.





















