Valentine's Day special | ‛பிரிதலும் காதலின் அலாதி தான்...’ கை கோர்த்த காதல் முதல்... கை விட்ட காதல் வரை பகிர்ந்த பார்த்திபன்!
‛‛காதல் தான் நாங்க பிரியவும் காரணம். நிச்சயித்த திருமணத்தில் பெற்றோர் மீது பழி சுமத்திவிடலாம். ஆனால் காதல் திருமணத்தில் அப்படி யார் மீதும் குறை சொல்லிவிட முடியாது’’
நடிகர் பார்த்திபன்-நடிகை சீதா தம்பதியும், கோலிவுட் வட்டாரத்தில் சுவாரஸ்யமான காதல் ஜோடி. நீண்ட இடைவெளிக்குப் பின் பிரிந்தாலும், அந்த பிரிவும் அலாதியானது என்கிறார் பார்த்திபன். இதோ அவர்களின் காதலையும், பிரிவையும் ஒப்பிடுகிறார் இயக்குனர், நடிகர் பார்த்திபன். அவர் அளித்த முந்தைய பேட்டி ஒன்றிலிருந்து இதோ அவர் பேசியது...
‛‛கேள்விக்குறி படம் தொடங்கும் போதே, ‛நல்லா கதை சொல்றான்... டைரக்ட்ரா இருக்கான்...’ என அவருக்கு என் மீது காதலித்திருக்கலாம். என் சைடு முதல் காதல் ஏற்பட வாய்ப்பில்லை. நான் ஒரு பிச்சைக்காரன் மாதிரி இருந்தேன். வாய்ப்பை தேடிக் கொண்டிருந்த சமயம். புதிய பாதைன்னு ஒரு படத்தை எடுக்க நான் எடுத்த போராட்டத்திற்கு முன்னாள், எனக்கு வேறு ஃபீலிங் வந்ததில்லை.
சீதா என் படத்திற்கு வந்தது தான் எனக்கு ப்ளஸ். அந்த ப்ளஸ்ஸை நான் வேறு எதற்காகவும் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சீதாவுக்கு என் மீது காதல் இருந்தது. அந்த காதலை பிந்நாளில் நான் ஏற்றுக் கொண்டேன். அதன் பின் கேட்பார்கள், யார் காதலை முதலில் சொன்னது என்று! சீதா பெயரை நான் கூறுவேன். பின்னர் சீதா வந்து கடிந்து கொள்வார். ‛ஏங்க மானத்தை வாங்குறீங்க... நீங்க தான்னு சொல்ல வேண்டியது தானே..’ என்பார். ‛இல்லம்மா... உன்னை ஆயிரம் பேர் லவ் பண்ணலாம்; ஆனால், நீ யாரை லவ் பண்றாங்களோ அவங்க தானே லக்கி; அப்படி நான் லக்கி’ என்று அவரை சமாளிப்பேன்.
காதல் தான் நாங்க பிரியவும் காரணம். நிச்சயித்த திருமணத்தில் பெற்றோர் மீது பழி சுமத்திவிடலாம். ஆனால் காதல் திருமணத்தில் அப்படி யார் மீதும் குறை சொல்லிவிட முடியாது. நாங்கள் தான் எங்களுக்கு பொறுப்பு. கமிட் ஆகிவிட்டோம் என்பதற்காக ஒரே வீட்டில் சிரமப்பட கூடாது. மனமுறிவு என்பது கஷ்டமானது இல்லை. நாங்கள் எங்கள் குழந்தைகளை பாதிக்காமல், தனித்திருக்கிறோம்.
காதல் திருமணம் செய்ததற்காக, எல்லாத்தையும் சகித்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் டார்ச்சர் பண்ணாமல், பிரிய முடிவு செய்தோம். எனக்கு பிரிந்ததால் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஒருவரை ஒருவர் நோகடிக்காமல் இருப்பதே காதல் தான். காதலோடு பிரிவதும் அழகான காதல் தான். முன்பு பிரிந்தவர்களை சேர்த்து வைக்க முயற்சிப்பேன். ஆனால், இப்போது தான் அது இயல்பு என தெரிகிறது.
இந்த காலகத்தில் கணவன்-மனைவி சேர்ந்து 7 ஆண்டு வாழ்ந்தால் பெரிய விசயமாகிவிடும். ஒத்து வராமல் போனால், பிரிந்து சந்தோசமாக இருக்கலாம்,’’ என பார்த்திபன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்