Vairamuthu speech : அவன் தான் உண்மையான கலைஞன்... கே. பாக்யராஜிற்கு புகழாரம் சூட்டிய கவிப்பேரரசு
எந்த ஒரு கலைஞன் கற்பனையில் பாத்திரங்களை தேடாமல் தான் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து பாத்திரங்களையும், சம்பவங்களையும் உருவி எடுக்கிறானோ அவன் தான் உண்மையான கலைஞன் - கே. பாக்யராஜ் குறித்து வைரமுத்து
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பதவியேற்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மீண்டும் தலைவராக பதவியேற்றார் இயக்குனர் கே. பாக்யராஜ். அந்த விழாவில் வெற்றிபெற்ற நிர்வாகிகளை வாழ்த்துவதற்காக பலர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம் :
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கே. பாக்யராஜ் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். "தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து நிர்வாகிகளும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். கே.பாக்யராஜ் ஒரு நல்ல எழுத்தாளரா இல்லையா என்பது குறித்த பட்டிமன்றம் நடத்தலாம், நல்ல இயக்குநரா என்பது குறித்து சர்ச்சைகள் எழுப்பலாம் ஆனால் அவர் ஒரு நல்ல தலைவரா இல்லையா என்பது குறித்து யாரும் விமர்சிக்க கூட முடியாது. தமிழ் படித்தவர், படைப்பாளி, சக மனிதர்களை நேசக்கக்கூடியவர், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர், நேர்மையானவர். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு நேர்மையான தலைவரை தேர்ந்து எடுத்து இருக்குறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவரை நீங்கள் தலைவராக தேர்ந்தெடுத்து இருத்தலும் இல்லாமல் போனாலும் அவரின் சிறப்புக்கள் அப்படியே தான் இருக்கும். எழுத்தாளர்களின் தலைவர் என்ற பதவி அவருக்கு மிகவும் பொருத்தமான பதவி.
சிறந்த எடுத்துக்காட்டு கே. பாக்யராஜ்:
கே. பாக்யராஜ் ஒரு சிறந்த எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், வசன எழுத்தாளர், உரையாடல் ஆசிரியர் எல்லாவற்றையும் தாண்டி அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பவர் தன்னை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே இங்கு கூடி இருந்தாலும் நீங்கள் அனைவரும் நிறைந்த நெஞ்சோடு வாழ்த்த வந்து இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி" என்றார் வைரமுத்து.
பண்புகளை இளைஞர்களின் பகிருங்கள்:
மேலும் அவர் கூறுகையில் கே. பாக்யராஜின் திறமைகளை உறுப்பினர்கள் உணர்வதை காட்டிலும் சமுதாயத்தின் சமகால இளைஞர்களுக்கும் அவரின் பண்புகள் பற்றி பகிரவும். ஒரு நல்ல படைப்பாளியின், தலைவனின், கலைஞனின் பண்புகளும், ஆற்றலும், குணங்களும், திறைமையையும் பகிர்வதன் மூலம் சமூகத்தின் வளத்தை கூட்ட முடியும். சிவாஜி, எம்,ஜி.ஆர், கண்ணதாசன், ஸ்ரீதர், இளங்கோவன் போன்றவர்கள் பார்த்து நாங்கள் அனைவரும் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தோம். அதை போலவே கே. பாக்யராஜை பார்த்தும் இன்று ஒரு தலைமுறை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட கூடாது என்றார்.
சிறந்த கலைஞன்:
சுமார் 40 ஆண்டுகளாக அவர் திரைத்துறையில் பணி செய்து வருகிறார். அவரின் இந்த பங்கு சாதாரண விஷயம் அல்ல. அவர் வாழ்ந்த சூழல், அவர் பிறந்து வளர்ந்த பகுதி, அவர் பார்த்த அந்த கதாபாத்திரங்கள் இவை அனைத்தையும் தாண்டி எந்த ஒரு கலைஞன் கற்பனையில் பாத்திரங்களை தேடாமல் தான் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து பாத்திரங்களையும், சம்பவங்களையும் உருவி எடுக்கிறானோ அவன் தான் உண்மையான கலைஞன் என கே. பாக்யராஜ் குறித்து மிகவும் பெருமையாக பேசினார் கவிப்பேரரசு வைரமுத்து.