“பழைய சோறு; அழுக்கு; செல்போன்; வசதி” - குழந்தை வளர்ப்பு குறித்து அருமையாக விளக்கிய ஊர்வசி!
ஆன்லைன் க்ளாஸ் என்றால் எந்த நேரத்தில் என்று பெற்றோர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் மட்டுமே அவர்களிடம் செல்போன் கொடுக்க வேண்டும் என்றார்.
தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தான் ஊர்வசி தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஊர்வசி. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். சொந்த வாழ்வில் பல பிரச்சினைகளை சந்தித்த அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சானலில் குழந்தை வளர்ப்பு பற்றி முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார்.
குழந்தைகளை இதை மட்டும் தான் சாப்பிடுவேன், இதெல்லாம் சாப்பிடமாட்டேன் என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு வளர்க்ககூடாது. பழைய சோறு இருந்தாலும் அதுவும் ஒரு சாப்பாடுதான், அதையும் சாப்பிட வேண்டும் என்று கூறினார். அதுபோல குழந்தைகளுக்கு நிறைய சௌகர்யத்தை பழக்கக்கூடாது, திடீரென எங்கு சென்றாலும் அதற்கு ஏற்றார் போல சார்ந்து வாழும்படியாக வளர்க்க வேண்டும் என்றார். வெளியில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட விட வேண்டும். இயற்கையோடு இயற்கையாக இருப்பதுதான் வாழ்க்கை. அதிக நேரம் மொபைலில் நேரம் செலவழிக்க விடக் கூடாது. ஆன்லைன் க்ளாஸ் என்றால் எந்த நேரத்தில் என்று பெற்றோர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் மட்டுமே அவர்களிடம் செல்போன் கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "செல்போனில் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற கேம்கள் விளையாடவே விடாதீர்கள். வன்முறையை அவர்கள் அங்கிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். எந்த குழந்தையும் யாருக்கும் குறைந்தது அல்ல, நம்மிடம் எது இருக்கிறதோ அது நம் தேவைக்கு போதுமானது, நாம் வசதியாகத்தான் இருக்கிறோம் என்று குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். நம் வசதிக்கு அது போல எல்லாம் வாழ முடியாது என்று யாருடனும் ஒப்பிட்டு அவர்கள் முன் பேச வேண்டாம். அதுமட்டுமின்றி குழந்தைகள் முன் நாம பேசுற வார்த்தைகள் ரொம்ப முக்கியம், தவறான வார்த்தைகளை கற்றுக்கொண்டு அவர்களும் பேசுவார்கள். சுத்தம் என்பதற்கும் பணத்திற்கும் சம்மந்தம் இல்லை, நம்மிடம் இரண்டு சட்டைகள் இருந்தாலும் நன்றாக துவைத்து போட வேண்டும். ஒருவர் அழுக்காக இருக்கிறார் என்பதற்காக அவரை தொடக்கூடாது என்றெல்லாம் குழந்தைகளுக்கு பழக்கக் கூடாது. அவர்களை எல்லோரோடும் ஒன்ற விட வேண்டும்." என்று கூறினார்.