கோவா சர்வதேச திரைப்பட விழா: தமிழ் சினிமாவில் இருந்து திரையிடப்படும் இரண்டு திரைப்படங்கள்!
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பு கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து `கூழாங்கல்’, `ஸ்வீட் பிரியாணி’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
![கோவா சர்வதேச திரைப்பட விழா: தமிழ் சினிமாவில் இருந்து திரையிடப்படும் இரண்டு திரைப்படங்கள்! Two films from Tamil cinema to be screened at Goa International Film Festival 2021 கோவா சர்வதேச திரைப்பட விழா: தமிழ் சினிமாவில் இருந்து திரையிடப்படும் இரண்டு திரைப்படங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/0b2a2dce2e481afd84d555f9ee3650a6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பு இந்த ஆண்டும் கோவாவில் நடைபெறவுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் இந்தச் சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து `கூழாங்கல்’, `ஸ்வீட் பிரியாணி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தத் திரைப்பட விழாவுக்குப் பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு அவற்றுள் இருந்து இதுவரை 24 திரைப்படங்களும், குறும்படங்கள் பட்டியலில் 20 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் இருந்து இவற்றுள் திரைப்படங்கள் பட்டியலில் வினோத் ராஜ் இயக்கிய `கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. குறும்படங்களின் பட்டியலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய `ஸ்வீட் பிரியாணி’ இடம்பெற்றுள்ளது. இந்த இரு திரைப்படங்களுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்போருக்குத் திரையிடப்படும்.
வினோத் ராஜ் இயக்கிய `கூழாங்கல்’ திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோரின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. குடி பழக்கத்திற்கு அடிமையான தந்தைக்கும் சிறுவனான மகனுக்கும் இடையிலான கதையாக உருவாக்கப்பட்டுள்ள `கூழாங்கல்’ திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவிற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படமாகவும் `கூழாங்கல்’ கொண்டாடப்படுகிறது.
ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள `ஸ்வீட் பிரியாணி’ குறும்படம் சென்னை நகரத்தில் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளி ஒருவரின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றியும், அதில் நகரத்தில் அவர் எதிர்கொள்ளும் சாதியப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுகிறது. மேலும், இந்தக் குறும்படத்தில் பிராங்க் செய்து புகழ்பெற்ற ஆர்.ஜே சரித்திரன் டெலிவரி செய்யும் நபராக முன்னணி கதாபாத்திரம் நடித்துள்ளார். இந்தக் குறும்படம் திரையிடப்பட்ட இடங்களில் பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
திரைப்படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்குப் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.வி ராஜேந்திர சிங் பாபுவும், குறும்படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்குப் பிரபல ஆவணப் பட இயக்குநர் எஸ்.நல்லமுத்துவும் தலைமை தாங்கியுள்ளனர். இந்த விழாவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் திரைப்படமாக அசாம் மற்றும் நாகலாந்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் பேசும் திமாசா மொழியில் உருவான ‘செம்கோர்’ படம் திரையிடப்படும் எனவும், குறும்படங்கள் பிரிவில் முதல் திரைப்படமாக ‘வேத்-தி விஷனரி’ எனும் ஆங்கில மொழி படம் திரையிடப்படு எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)