Actor Vijay Birthday: ‛பங்கம் பங்கம் பதிலடி... அண்ணா பண்ணும் அதிரடி... வாத்தி யாரு தளபதி!
விஜய் என்கிற மூன்றெழுத்திற்கு தமிழ் சினிமாவில் வெற்றி என்கிற மூன்றெழுத்து இன்றும் பாத்தியப்பட்டது. அதனால் தான் விஜயை இந்த உலகம் கொண்டாட சாத்தியப்பட்டது.
விஜய் என்கிற பெயருக்கு தமிழ்நாடு மட்டுமல்ல.... உலக அரங்கில் எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அரங்கம் அதிரும். எம்.ஜி.ஆர்.-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என்கிற தலைமுறை ஸ்டார் ரேஸில், தன் பெயரை தக்க வைத்த ஆயிரத்தில் இருவரில் ஒருவர். நீக்கமென எங்கும் நிறைந்திருக்கும் தளபதி ரசிகர் படையின் அன்புக்கும், ஆதரவிற்கும் பஞ்சம் வைக்காமல், கெத்தாய் கில்லியாடும் தளபதி விஜய்.. இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் மட்டுமா கொண்டாடுகிறார்... உலகமே கொண்டாடுகிறது! படியில் மிதித்து, நொடியில் உயர்ந்ததல்ல விஜயின் வாழ்க்கை. பல்வேறு தோல்விகள், அவமானங்கள், அவதூறுகளை கடந்து உங்கள் விஜய், தளபதி விஜயாய் தலை நிமிர்ந்து நிற்கிறார்.
விடாது ‛விஜய்’ பெயர்!
குடும்பத்தில் யாராவது ஒருத்தர் சினிமாவில் இருந்தாலே, அவர் வாரிசு நடிகர் என முத்திரை குத்தும் சினிமா அரங்கில், தாய், தந்தை, மாமா என அத்தனை பேரும் சினிமாவில் இருக்க, இங்கு அடியெடுத்து வைத்த விஜயை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? தந்தை ஆதரவில் தயவு பெறுகிறார் என்றெல்லாம் விமர்சித்தவர்கள் உண்டு. அதையெல்லாம் எதிர்கொள்வதே விஜய்க்கு அப்போது சவாலாக இருந்தது. விஜய் என்றால் வெற்றி என்று பொருள். விஜய் அறிமுகம் ஆனதே வெற்றியில் தான். விஜயகாந்த் நடித்த வெற்றி திரைப்படத்தில் 1984ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய். படத்தில் பெயரும் விஜய் தான். அதன் பின் நான் சிவப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு என தொடர்ந்து மூன்று படங்கள், அனைத்திலும் குழந்தை நட்சத்திரம். 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் தான் விஜய் ஹீரோ. இதில் சுவாரஸ்யமான சங்கதி என்னவென்றால், விஜய் குழந்தை நட்சத்திரமாய் தோன்றியதிலிருந்து அறிமுகமாகிய பின் நடித்த மூன்று படங்கள் வரை விஜய் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் விஜய் தான். ஆறாவது படத்தில் அவரது பெயர் தேவா. படத்தின் பெயரும் தேவா தான். 7 வது படம், அஜித் உடன் நடித்த ராஜாவின் பார்வையிலே. அதில் விஜய் பெயர் விஜய் தான். அவர் நடித்த முதல் 7 படங்கள் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியது. அவரை வாரிசு நடிகர் என அனைவரும் விமர்சிக்க அதுவே முக்கிய காரணமானது.
விஜய்க்கு மாற்றம் தந்த பூவே உனக்காக!
அடுத்தடுத்து ஹீரோவாக 8 படங்கள் நடத்திருந்தாலும், விஜய்க்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை. விஜய் படம் கவர்ச்சியா இருக்கும், ஆபாசமா இருக்கும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இளமை துள்ளல் படங்களாக தான் இளைஞர் பட்டாளம் பார்த்தது. விஜய் அதிலிருந்து விடுபட எண்ணினார். அதற்காக காத்திருந்தார்.அப்போது தான் விக்ரமன் இயக்கத்தில 1996ல் பூவே உனக்காக வெளியானது. தமிழ் சினிமாவில் விஜய் என்கிற நடிகரை காதல் நாயகனாக கொண்டாட வைத்து, வேறு இடத்திற்கு கொண்டு சென்றது பூவே உனக்காக. அதன் பின் வசந்தவாசல், மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர் என காதல் படங்களாக களமிறங்கிய விஜய்க்கு, பூவே உனக்காக போல பெரிய மாஸ் ஹிட் கிடைக்கவில்லை. 1997 ல் காதலுக்கு மரியாதை வெளியான பிறகு தான், விஜய் வேறு இடத்திற்கு நகந்தார். எனை தாலாட்ட வருவாளா... என அனைவரின் மடியிலும் உறங்கினார். அதன் பின் விஜய் நடித்ததெல்லாம் ஹிட் . நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என்றென்றும் காதல்... என அடுக்கிக் கொண்டே போகலாம்!
‛வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா...‛
நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா, கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான் வரை மெல்லிய காதல் நாயகனாக வந்த விஜய், 2002ல் தமிழன் படத்திலிருந்து அரசியல், ஆக்ஷன் என வேறு பாதைக்கு மாறினார். அதன் பின் நடந்ததெல்லாம் வேறு அதகளம். வசீகரமான திருமலை உதயமாகி, கில்லி வேகத்தில் மதுர போய், திருப்பாச்சி அரிவாளோடு சச்சின் போல சுக்ர திசையில் சிவகாசி பட்டாசாய் வெடித்து சிதறி, ஆதி சிவனாய் போக்கிரிகளை துவம்சம் செய்த அழகிய தமிழ்மகனை, ஊர் குருவி என்றவர்கள் பருந்து போல் பார்க்க , வில்லெடுத்து வந்த வேட்டைக்காரனுக்கு சுறா பாய்ச்சல். காவலன் வேலாயுதம், நண்பன் படை சூள துப்பாக்கி ஏந்தி ஜில்லாவில் கத்தியை காட்டி புலி வேசம் போட்ட அரக்கர்களை தெறிக்க விட்டு, வர்லாம் வர்லாம் வா பைரவா பைரவான்னு... மெர்சல் காட்டி தனி சர்க்கார் நடத்தும் பிகிலுக்கு, மாஸ்டர் என்றுமே விஜய் தான்! இப்படி தான் விஜய் படங்கள் காலத்தில் நகர்ந்தன.
‛இது தான் விஜய்‛
வரி, ரெய்டு, தடை என ஒவ்வொரு ஆண்டும் விஜய் சந்திக்கும் பிரச்னைகள் போல வேறு எந்த நடிகரும் சந்திப்பதில்லை. அதற்காக விஜய் தன் ஓட்டத்தை நிறுத்தவுமில்லை, ஆட்டத்தை முடிக்கவும் இல்லை. விஜய் அதன் பிறகு தான் வெடிக்கிறார். அவர் சிரித்தாலும் அரசியலாகிறது. அமைதியானவர் என்கிறார்கள். அந்த அமைதியும் அரசியல் பேசுகிறது. விஜய் அல்ல ஜோசப் விஜய் என்றார்கள். ஆனாலும் உலகம் விஜயை கொண்டாடுகிறது. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் விஜய். ‛எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே .. உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே...’ இப்படி தான் விஜய், பலர் உள்ளத்தில் தூர் வைத்துள்ளார். அந்த வேரிலிருந்து இன்று பல விழுதுகள் துளிர்ந்துள்ளன. விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் உதவிகள் உயிர்தெழுகின்றன. விஜய் என்கிற மூன்றெழுத்திற்கு தமிழ் சினிமாவில் வெற்றி என்கிற மூன்றெழுத்து இன்றும் பாத்தியப்பட்டது. அதனால் தான் விஜயை இந்த உலகம் கொண்டாட சாத்தியப்பட்டது. இன்று போல் என்றும் மக்கள் மனதை ஆளட்டும் தளபதி!