Thevar Magan 2: இது கமல் சாரின் கதை.. தேவர் மகன் 2 பற்றி இயக்குநர் மகேஷ் நாராயணன் விளக்கம்..
முன்னதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்த நடிகர் கமல், தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுத்தாலும் அப்படத்துக்கு தேவர் மகன் எனப் பெயர் வைக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், கௌதமி, ரேவதி, நாசர், வடிவேலு ஆகியோரது நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேவர் மகன்’. வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற இப்படம் 5 தேசிய விருதுகளை வாரிக் குவித்தது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில், பரதன் இயக்க, கதை, திரைக்கதையை நடிகர் கமல்ஹாசனே எழுதியிருந்தார்.
பாராட்டும் விமர்சனங்களும்
ஒரு ரயிலில் ஊருக்கு வந்து இறங்கும் கதாநாயகனோடு தொடங்கும் கதை, அவர் கைதாகி மீண்டும் ரயிலேறி செல்வது போல் முடிக்கப்பட்டது உள்ளிட்ட பல சிறப்பான தருணங்களுக்காக இயக்குநர் மிஷ்கின் உள்பட பல திரைத்துறையினர் இன்றளவும் தேவர் மகன் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
மறுபுறம் தேவர் மகன் சாதிய வன்மத்தை ஊட்டுவதாகவும், ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடலின் உருவாக்கம் ஒரு பிரிவு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்தும் மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
பெயர் சர்ச்சை
இது குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்த நடிகர் கமல், தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுத்தாலும் அப்படத்துக்கு தேவர் மகன் எனப் பெயர் வைக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இச்சூழலில் முன்னதாக தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாகவும், அதனை பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் 'இந்தியன் 2', பா. ரஞ்சித்,மணிரத்னம் படங்கள் என அடுத்தடுத்து கமல் கமிட் ஆனதால், தேவர் மகன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இயக்குநர் விளக்கம்
இந்நிலையில், இது குறித்து இயக்குநர் மகேஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “படம் கைவிடப்படவில்லை. இது கமல் சாரின் கதை. தற்போது அவர் பல படங்களில் பிஸியாக இருக்கிறார்.
அதனால் நாங்கள் சிறிது காலத்துக்கு எங்கள் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். ஆனால் படம் கைவிடப்படவில்லை. நான் ராஜ் கமல் இண்டர்நெஷனல் நிறுவனத்தில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
மலையாளத் திரையிலகில் எடிட்டர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என பன்முகக் கலைஞராக விளங்கும் மகேஷ் நாராயணன், ‘விஸ்வரூபம்’ படத்தில் எடிட்டராக பணியாற்றினார். தொடர்ந்து இருவரும் நட்பு பாராட்டி வந்த நிலையில், சென்ற ஆண்டு மகேஷ் நாராயணினின் இயக்கத்தில் ஃபஹத் நடிப்பில் வெளியான ‘மாலிக்’ விமர்சனரீதியாக பெரும் பாராட்டுகளைக் குவித்தது. மாலிக் படம் மூலம் ஈர்க்கப்பட்ட கமல்ஹாசன் மகேஷ் நாராயணனுடன் இப்படத்தில் இணைய முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.