Thangalaan: மாளவிகாவுக்கு நடிக்க வரல;பார்வதியோடு வாக்குவாதம்: தங்கலான் நடிகைகள் குறித்து பா.ரஞ்சித் ஓபன் டாக்
தங்கலான் படத்தில் நடிகை பார்வதி திருவொத்து மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் , மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தங்கலான் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவொத்து உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இந்த இரு நடிகைகள் உடன் பணியாற்றிய அனுபவத்தை இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பார்வதி ரொம்ப கேள்வி கேட்டார்
நடிகை பார்வதி திருவொத்து இப்படத்தில் கங்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பார்வதி குறித்து ரஞ்சித் கூறியபோது " இப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்திரத்தை கையாளும் வகையிலான ஒரு பெண் தேவைப்பட்டார். பார்வதியை நான் பூ படத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். அவருடைய படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். கங்கம்மா கதாபாத்திரத்திற்கு பார்வதி அல்லது ராதிகா ஆப்தே இருவர் என் மனதில் இருந்தார்கள். பார்வதி இப்படத்திற்குள் வந்ததும் நிறைய கேள்விகளை கேட்கத் தொடங்கினார். பொதுவாகவே எனக்கு விளக்கம் கொடுப்பது பிடிக்காது. பார்வதி நிறைய சந்தேகங்கள் கேட்டுக்கொண்டே இருப்பார். அதனால் எங்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன" என்று கூறினார்.
மாளவிகா மோகனன்
" மாளவிகா மோகனன் நடித்த 'Beyond the clouds' படத்தை பார்த்தபோது எனக்கு அவரது நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்திற்காக அவரை லுக் டெஸ்ட் செய்தோம். ஆரத்தி கதாபாத்திரத்திற்கு அவரது தோற்றம் கச்சிதமாக பொருந்தியது. ஆனால் அவர் இந்த கதாபாத்திரத்தை எப்படி நடிக்கப் போகிறார் என்பதை நான் யோசிக்கவே இல்லை. முதல் நாள் ஷூட்டிற்கு சென்றபோது ஒரு காட்சியை எடுக்கத் தொடங்கினோம். கையில் கம்பை வைத்துக்கொண்டு அவர் சுத்த வேண்டும். அவருக்கு அது வரவேயில்லை. இவர் இந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆவாரா என்று விக்ரம் உடன் பேசிக்கொண்டிருப்பேன். மூன்று நாள் அந்த காட்சியை எடுக்க முயற்சி செய்தோம். வரவேயில்லை. ஆனால் அந்த மூன்று நாள் மாளவிகா தனக்கு வரவில்லை என்றாலும் அவ்வளவு முயற்சி செய்தார். அவருடைய அந்த முயற்சியைப் பார்த்து இந்த கதாபாத்திரத்திற்கு வேற கதாபாத்திரம் பற்றி நான் யோசிக்கவே இல்லை." என்று ரஞ்சித் தெரிவித்தார்.