Thandatti: அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடம்... ஓடிடியில் வரவேற்பை அள்ளும் ’தண்டட்டி’!
திரையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற தண்டட்டி, ஓடிடி தளமான அமேசான் பிரைமில் ஜூலை 14ஆம் தேதி வெளியானது.
அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கிய தண்டட்டி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் எடுக்கப்பட்ட தண்டட்டி கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி திரையங்கில் வெளியானது. பசுபதி, ரோகிணி, முகேஷ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடத்த தண்டட்டி கிராமத்து வாழ்வியலையும், அந்தக் காலத்தில் வயதான பாட்டிகள் அணிந்திருக்கும் தண்டட்டி என்ற காதணி திருடப்பட்டதை அழகாகக் கூறி இருக்கிறது.
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ரோகிணி வயது மூப்பு காரணமாக இறந்து போகிறார். இறப்பதற்கு முன்பு காணாமல் போய் கிடைத்த ரோகிணியின் இறுதிச்சடங்கில் பிரச்னை வரக்கூடாது என போலீஸ் வரவழைக்கப்படுகின்றனர். அதேநேரம், இறந்து கிடக்கும் மூதாட்டியின் தண்டட்டி திருடு போகிறது. சடலமாக கிடக்கும் மூதாட்டியின் நகை திருடு போவதும், அதைச் சுற்றி நடக்கும் சுயநல மனங்களையும், அதன் பின்னால் இருக்கும் எதார்த்தத்தையும், நகைச்சுவை உணர்வுடன் கூறியுள்ளார் ராம் சங்கையா.
இறப்பு, துக்க வீடு, ஒப்பாரிகள், தண்டட்டியை பறிக்க துடிக்கும் மகள், அவர்களுக்குள் ஏற்படும் அடிதடி, தாய் மரணத்திலும் மதுபோதையில் தள்ளாடும் மகன், துக்க வீட்டிலும் மரியாதைக்கு மல்லுக்கட்டும் சொந்தபந்தங்கள், திருடு போன நகையை தேடும் போலீஸ் என பல்வேறு பரிணாமங்களில் கதையை கூறி அசத்தலான ஓர் படைப்பாக தண்டட்டி கொண்டாடப்படுகிறது.
அதற்கு ஏற்றார்போல் தண்டட்டியின் கதையில் வரும் நடிகர்களின் தேர்வும், அவர்களின் எதார்த்தமான நடிப்பும் ஆழமான கதைக்கு கைக்கொடுத்துள்ளது. யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் காட்சிகளும், தண்டட்டிக்கு பின்னால் இருக்கும் காதல் கதையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும், ஆணவ கொலையும் திரையில் காட்டி அசத்தி இருக்கின்றனர்.
இதேபோல் கிராமத்து அழகை மண் மணத்தோடு தனது ஒளிப்பதிவு மூலம் காட்டி அசத்தி இருக்கிறார் மகேஷ் முத்துசாமி. கே.எஸ். சுந்தர மூர்த்தியின் பின்னணி இசை கதைக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது. சிவாஜியின் படத்தொகுப்பும் படத்தின் காட்சிகளை அழகாக செதுக்கியுள்ளது.
இந்த நிலையில் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற தண்டட்டி, ஓடிடி தளமான அமேசான் பிரைமில் ஜூலை 14ஆம் தேதி வெளியானது. அன்று முதல் இன்று வரை அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதிக பொருட்செலவு இல்லாத படங்களுக்கு ஓடிடி தளங்கள் கைக்கொடுக்கும் நிலையில், நகைச்சுவையுடன் கூடிய எதார்த்த கிராமத்துக் கதையைக் கூறும் தண்டட்டிக்கு ஓடிடி தளத்திலும் வரவேற்பு கிடைத்துள்ளது.