Sherni | பஞ்சாயத்தாகும் ஷெர்னி திரைப்படம் - படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வேட்டைக்காரர்கள்!
அபர்ணா என்ற அதிகாரியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது ஷெர்னி
சத்தமில்லாமல் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள ஷெர்னி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வித்யா பாலனுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. வன விலங்குகள் குறித்தும், வனம் குறித்தும் வன அதிகாரி பார்வையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அபர்ணா என்ற அதிகாரியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநில வனத்துறையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் அபர்ணா, 'அவ்னி' என்ற பெண் புலி 13 பேரை அடித்து கொன்றபோது அந்த புலியை மீண்டும் வனப்பகுதிக்கு துரத்தி அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டவர். ஆனால் புலியை சுட்டுக்கொல்ல அரசு ஆணையிட்டது.
T1 என்று அழைக்கப்படும் அவ்னி புலியை கொலை செய்யக்கூடாது என்று, அதனை உயிரோடு காப்பாற்ற வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர். பல இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன. ஆனால் அரசின் உத்தரவின் படி அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டது. அந்தப்புலியை சுட்டுக்கொன்றவர்கள் ஷபாத் அலிகான் மற்றும் அவரது மகன் அஷார் அலிகான். இப்போது இருவரும் ஷெர்னி திரைப்படம் குறித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். ’’நானும் என் தந்தையும் ஒரு குற்றச்சாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளோம். ஷெர்னி திரைப்படம் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகிறது. இது எங்கள் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்துகிறது’’ என குறிப்பிட்டு ஷெர்னி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். புலி கொல்லப்பட்டது குறித்து பேசிய ஷபாத் அலிகான், தன்னை காத்துக்கொள்வதற்காக 4 மீட்டர் இடைவெளியில் அஷார் அந்தப்புலியை கொன்றார் என்றார்.
இதுகுறித்து தெரிவித்த ஷெர்னி படக்குழு, ஷெர்னி என்பது கற்பனையான கதையைக் கொண்ட புனைக்கதையான படைப்பு. ஷபாத் அலி மற்றும் அவரது மகன் அஷார் குறித்தெல்லாம் எந்த கதாபாத்திரமும் படத்தில் இல்லை. அவரை சித்தரிக்கும் கதாபாத்திரம் படத்தில் இருப்பதற்கான ஆதாரமும் எதுவும் இல்லை. என்று குறிப்பிட்டது. ஆனால் படக்குழுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அஷார் அலி கால், ஷெர்னி திரைப்படம் அவ்னி சுட்டுக்கொல்லப்பட்டதை பிரதிபலிக்கும் விதமாகவே எடுக்கப்பட்டுள்ளது. இது எதார்த்தமானது அல்ல என்றார்.
அவ்னி புலியை உயிரோடு பிடிக்க பெரிதும் முயற்சி செய்தவர் வனத்துறை அதிகாரி அபர்ணா, மகாராஷ்டிராவில் உள்ள பந்தர்கவுடா வனப்பகுதியில் மனிதர்களுக்கும் வன விலங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க பெண் வனக்காவலர்கள் குழுக்களை உருவாக்கி, வனத்திற்கு அருகாமையில் வசிக்கும் கிராம மக்களோடு தொடர்பில் இருக்கும்படி செய்தார். இதன் காரணமாக 24 மணிநேரமும் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் கட்டுப்படுத்த முடிந்தது.
மகாராஷ்டிராவில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு மத்திய வனச்சரகத்திற்கு உட்பட்ட அசாம் மாநிலத்தில் உள்ள காண்டாமிருகங்களின் சரணாலயமான காசிரங்கா தேசிய பூங்காவின் பொறுப்பு அதிகாரியாகவும் அபர்ணா பணியாற்றி உள்ளார்.