Atta Rava Idly: கோதுமை ரவை இட்லி இந்த மாதிரி செய்து பாருங்க... சூப்பரா இருக்கும்...
சுவையான கோதுமை ரவை இட்லி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இட்லி தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. காலை உணவுக்கு இட்லி மிகவும் ஏற்றது. கோதுமை ரவை இட்லி சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். ஆவியில் வேக வைத்து உணவு என்பதால் செரிமானத்திற்கு மிகவும் ஏற்றது. மேலும் எண்ணெய் இல்லாமல் அல்லது எண்ணெய் குறைவாக பயன்படுத்தி செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த இட்லியை விரும்பி சாப்பிடுவர். வாங்க கோதுமை ரவை இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – ஒரு ஸ்பூன்
தயிர் – ஒரு கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயை சூடாக்கி அதில் சிறிது நெய் சேர்த்து, ரவையை 5 நிமிடங்கள் வறுத்துக்கொள்ள வேண்டும்.( ரவை தீயாமல் பக்குவமாக வறுத்து எடுக்க வேண்டும்)
ரவை ஆறியவுடன், உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும். ரவை ஊறியதும் மாவு இன்னும் கெட்டி பதத்திற்கு மாறி விடும் எனவே அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவேண்டும்.
இப்போது கடுகு பொறிய ஆரம்பித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவேண்டும்.
பிறகு தாளித்த பொருட்களை ஊறவைத்த ரவையுடன் சேர்த்து கலந்து விடவேண்டும்.
வறுத்த முந்திரியை ரவை கலவையில் சேர்த்து, இட்லி தட்டில் எண்ணெய் தடவி, ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்கள் வேகவைக்கவேண்டும்.
அவ்வளவு தான் சுவையான கோதுமை ரவா இட்லி தயார். இதை சட்னி, சாம்பாருடன் வைத்து சாப்பிடலாம்.