(Source: ECI/ABP News/ABP Majha)
IND Vs AUS 2nd T20: தொடருமா இந்தியாவின் வெற்றி? ஆஸ்திரேலியா உடன் இன்று 2வது டி20 போட்டி - மழை குறுக்கிடுமா?
IND Vs AUS 2nd T20: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.
IND Vs AUS 2nd T20: திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:
அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. முதல் போட்டியில் 209 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை அநாயசமாக எட்டிய இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்:
அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று தொடரில் மேலும் முன்னிலை பெற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் - பலவீனங்கள்:
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. மறுமுனையில், உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது. முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட மேக்ஸ்வெல், ஜாம்பா டிராவிஸ் ஹெட் ஆகியோர் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானம் எப்படி?
போட்டி நடைபெறும் திருவனந்தபுரம் பகுதியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானில அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 3 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.
உத்தேச அணி விவரம்:
இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட்/டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி/மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எலிஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா/ஆடம் ஜம்பா.