Happy Birthday Goundamani: ’கவுண்டர் டயலாக்குகளின் மகான்’ .. மகா நடிகர் கவுண்டமணி பிறந்தநாள் இன்று..!
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இன்று தனது 84 ஆவது பிறந்நாளைக் கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பட்டியல் மிக நீண்டது. இந்த வரிசையில் தமிழ் ரசிகர்களை மகிழ வைத்ததில் கவுண்டமணிக்கு நிச்சயம் ஒரு பெரிய பங்கிருக்கிறது. சிரிப்பதற்கு காரணம் தேவையில்லை தான், ஆனால் ஒரு நகைச்சுவை எதன் அடிப்படையில் கட்டமைக்கப் படுகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம். அது இன்னொருவரை சிறுமைப் படுத்துகிறதா, நம்மை நாமே பகடி செய்துகொள்கிறதா, ஒரு அதிகாரத்தை கேள்வி எழுப்ப பயன்படுகிறதா, மிக சோகமான ஒரு தருணத்தை கடந்துபோக உதவுகிறதா இப்படி எத்தனையோ வகைகளில் நகைச்சுவையை நாம் பயன்படுத்துகிறோம்.இதில் கவுண்டமணியை எந்த வகையில் சேர்க்கலாம்.
எலியும் பூனையும்
சின்ன வயதில் எலி மற்றும் பூனைப் பற்றிய கதைகளை கேட்டிருந்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரியும். பூனை எலியை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை ஓங்கி உதைக்க வேண்டும். அப்போது தான் நமக்கு சிரிப்பு வரும். அதேபோல் தான் கவுண்டமணி அவர்களின் பெரும்பாலான நகைச்சுவை காட்சிகளும். ஒரு காட்சியில் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்றால் அவருக்கு ஒரு எலி வேண்டும். அந்த எலிதான் செந்தில். கவுண்டமணி செந்திலை உதைக்காத காட்சிகள் மிகக் குறைவு. அப்படி அவர் செந்திலை அடிக்காத காட்சிகள் தான் நமக்கு மனதளவில் நெருக்கமானதாக இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.
அதிகாரத் தொனி
கவுண்டமணி ஒரு சீனில் இருக்கிறார் என்றால் அவரது குரலை மட்டுமே தான் நமது காதில் விழுந்துகொண்டிருக்கும். சத்தமே இல்லாமல் உடல் மொழியால் மட்டுமே நம்மை சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். கவுண்டமணியின் நகைச்சுவை சற்று நாடகத்தன்மை மிகுந்தது. வசனங்களை மேடையில் பேசுவது போன்ற பாணியில் பேசுவது அவரது வழக்கம் ஆனால் தனது குரலை தனது இருப்பை நிலைநாட்ட அவர் சத்தமாக பேசுவது அவர் கத்தி பேச வேண்டியதாக இருக்கிறது. இது திரையில் ஒரு தரப்பான ஒரு நகைச்சுவையாக மாறிவிடுகிறது.
கவுண்டர் வசனங்கள்
கலாய்ப்பதில் கவுண்டமணியை யாரும் மிஞ்ச முடியாது தான். ஆனால் பல சமயங்களில் ஒருவரின் தோற்றத்தை ஒருவரது குரலை,சமூக நிலையில் பின்தங்கிய ஒருவருடன் ஒப்பிட்டு ஒரு நகைச்சுவை அமைந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.கவுண்டமணியின் பிற்காலப் படங்கள் அவரது முந்தைய காலக்கட்டத்தை விட அதிகம் ரசிக்கக்கூடியவை. சமுத்திரம், மலபார் போலீஸ் இந்த மாதிரியான படங்களில் நல்ல உணர்ச்சிப் பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார் அவர்.
பல்வேறு மூட நம்பிக்கைகளை நகைச்சுவைக்கு உட்படுத்துவதில் ஒரு வில்லனை டம்மியாக்குவதில் அவரது நகைச்சுவை ரசிக்கக் கூடியவகையில் இருந்திருக்கிறது. இன்று அனைவராலும் கொண்டாட்படும் நடிகராக இருக்கும் கவுண்டமணி மேல் நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதே அவரது இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்திற்கு நாம் செலுத்தும் மரியாதையும் கூட. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவுண்ட்டர் கிங் கவுண்டமணி .