சூர்யாவா ? சசிகுமாரா ? மே 1 ரிலீஸான இரு படங்களில் வசூலில் வென்றது யார்? நிலவரம் இதோ
மே 1 ஆம் தேதி வெளியான சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய இரு படங்களின் வசூல் நிலவரங்களையும் பார்க்கலாம்

கடந்த மே 1 ஆம் தேதி ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய இரு படங்கள் வெளியாகின. கார்த்திக் சுப்பராஜ் சூர்யா கூட்டணியில் உருவான ரெட்ரோ படத்திற்கு சூர்யா ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்தது . இருந்தாலும் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு சினிமா வட்டாரங்களில் சிறப்பான விமர்சனங்கள் வெளியாகின. இரு படங்கள் வெளியாகி திரையரங்கில் 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் இரு படங்களின் வசூலையும் பார்க்கலாம்
ரெட்ரோ
ரெட்ரோ படத்தில் சூர்யா , பூஜா ஹெக்டே , ஜோஜூ ஜார்ஜ் , ஜெயராம் , கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிம் நடிப்பு , சந்தோஷ் நாராயணனின் இசை , கார்த்தி சுப்பராஜின் தனித்துவமான காட்சி அமைப்புகள் என படத்தில் நிறைய விஷயங்கள் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. ஆனால் மையக் கதையை விட்டு படம் மற்ற விஷயங்களில் விலகிச் செல்வது ஒரு நெகட்டிவாக ரசிகர்கள் கூறியுள்ளார்கள்
ரெட்ரோ வசூல்
முதல் நாளில் ரெட்ரோ படம் ரூ 46 கோடி வசூலித்தது. தொடர்ந்து 5 நாளில் உலகளவில் ரூ 104 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. தற்போது வரை ரெட்ரோ தமிழ் நாட்டில் மட்டும் ரூ 48.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யோகி பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தில் குடிபெயரும் ஈழத் தமிழ் குடும்பத்தை மையமாக வைத்து காமெடி டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. படத்திற்கு நாலா பக்கமிருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் முதல் நாளைக் காட்டிலும் 10 ஆவது நாளில் அதிகப்படியான வசூல் குவிந்துள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி வசூல்
ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் , ரஜினி ஆகியோரிடம் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது டூரிஸ்ட் ஃபேமிலி . இத்திரைப்படம் தமிழ் நாட்டில் இதுவரை ரூ 37.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 1 ஆம் தேதி வெளியான இரு படங்களுமே தமிழ்நாட்டில் கிட்டதட்ட ஒரே வசூல் ஈட்டியுள்ளன. ஆனால் பெரிய ஸ்டார்ரான சூர்யா படத்துடன் போட்டியிட்ட அறிமுக இயக்குநரின் படம் 50 கோடி வசூல் ஈட்டியிருப்பது இன்னும் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.






















