Amitabh Bachchan | சூர்யாவைப் போற்றிய சூரர்.. கண்கலங்கி போஸ்ட் போட்ட அமிதாப் பச்சன்..!
இந்திய சினிமாவின் சூரர் என்றால் அது அமிதாப் பச்சன்தான். அவருக்கு நிகர் அவரே. உயரத்திலும் நடிப்பிலும்.
இந்திய சினிமாவின் சூரர் என்றால் அது அமிதாப் பச்சன்தான். அவருக்கு நிகர் அவரே. உயரத்திலும் நடிப்பிலும். அப்படிப்பட்ட சூரர், சூர்யாவின் சூரரைப் போற்று பாடலைக் கேட்டுவிட்டு பாராட்டியிருக்கிறார். நடிப்பில் அசகாய சூரரரான அமிதாபின் பாராட்டு படக்குழுவை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து கடந்தாண்டு அமேசான் தளத்தில் வெளியானது ‘சூரரைப் போற்று திரைப்படம்.
இத்திரைப்படம் விமர்சகர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் பாராட்ட வைத்தது. நெடுமாறன் ராஜாங்கம் இதுதான் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.
இந்தப்படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க உள்ளார். சூரரைப்போற்று இந்தி திரைப்படத்தை, சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கையிலே ஆகாயம் பாடலைக் கேட்ட அமிதாப் பச்சன். டம்ப்ளர் எனப்படும் சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சி பொங்க ஒரு போஸ்டைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் காலம் நாம் எதிர்பார்க்காததைக் கொண்டு வந்து கையில் கொடுக்கும். அப்படித்தான் நேற்றைய தினம் அமைந்தது. அந்த உணர்வு மிகப்பெரியது. என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் கண்கள் குளமாகின. அதற்குக் காரணம் ஒரு பாடல். அதுவும் ஒரு தமிழ்ப்பாடல். நடிகர் சூர்யா தென்னகத்தின் சூப்பர் ஸ்டார். அவருடைய படத்திலிருந்து தான் அந்த நெகிழவைக்கும் பாடலைக் கேட்டேன். அந்தப் பாடலின் வீடியோவும் சரி வரிகளும் சரி என்னை கண்கலங்கச் செய்துவிட்டது. ஒரு தந்தை மகனுக்கு இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் பாடல் இது என்று பதிவிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் அந்தப் பாடலின் வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடனடியாக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், மிக்க நன்றி. மிகப்பெரிய ஊக்கசக்தியாக இருக்கும் ஒருவர் உங்களது படைப்பைப் பாராட்டும் போது இதயம் நிறையும் என்று பொருள்படும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
கையிலே ஆகாயம் பாடலை யுகபாரதி எழுதியிருந்தார். சைந்தவி பாடியிருந்தார்.