(Source: ECI/ABP News/ABP Majha)
Suriya-Karthi: ‘விமர்சனங்களை விட்டு தள்ளவும்’.. நிவாரண பணிக்கு உதவுமாறு சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு அழைப்பு..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என நடிகர் சூர்யாவின் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும் என நடிகர் சூர்யாவின் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் கடந்த 2 தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. இதில் சூறைக்காற்றுடன் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இப்படியான நிலையில் நடிகர் சூர்யாவின் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், “தலைமை மன்றத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் இயங்கும் அன்பான #AnbaanaFans கவனத்திற்கு... நம்முடைய அண்ணனோ, அவரைப்பின்பற்றும் நாமோ,வெற்று விளம்பரத்திற்காகவோ, மற்றவர்களின் கவனம் நம் மீது படவேண்டும் என்பதற்காகவோ எதையும் செய்பவர்கள் இல்லை.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் நம் மக்களுக்கு நம்மால் முடிந்த அளவு களத்தில் நின்று உதவி செய்ய வேண்டும் என்பதே சூர்யா,கார்த்தி அண்ணன்கள் நமக்கு கற்றுத் தந்துள்ள நற் படிப்பினை. எனவே சமூக வலைத்தங்களில் நாம் செய்யும் பணிகளுக்கு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை வைக்கும் தருணங்களில் நீங்கள் அவர்களுக்குபதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
"செயல், அது ஒன்றே மிக உயர்ந்த சொல்" என்று இயங்கும் நாம்,"தரம் தாழ்ந்த நேர்மை அற்ற விமர்சனங்களுக்குப் பதில் அளித்து நம் நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுவோம், மக்கள் பயன்பெற.. என்று சூர்யா அண்ணன் நமக்கு கற்றுத் தந்ததை நினைவில் கொள்வோம்.களப்பணியாற்றும் இதர தோழர்களுக்கும், அனைத்து அமைப்பினருக்கும் எங்களின் வாழ்த்துகளும். நன்றிகளும்.
அண்ணன்கள் சூர்யா மற்றும் கார்த்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவையான உணவினை வழங்கி வருகின்றோம். உணவு வழங்கும் பணி என்பது இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடரும். தேங்கி உள்ள மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடங்கும்.
இதற்கான உதவி முகாம் : எண் 75, இராமாபுரம் ரோடு, வளசரவாக்கம், சென்னை -600 087 என்ற முகவரியில் 08.12.2023 வெள்ளிக்கிழமை முதல் செயல்படத்தொடங்கும்.இதர மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்களால் இயன்ற உதவி பொருட்களை தலைமை மன்றத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.