Rajinikanth: ரஜினியிடம் அந்த கேள்விகள் மட்டும் கேட்கக்கூடாதாம்! சூப்பர்ஸ்டார் என்ன சொன்னாரு தெரியுமா?
கூலி படப்பிடிப்பிற்காக தாய்லாந்து புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த், அரசியல் கேள்விகள் ஏதும் தன்னிடம் கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்றார்.
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
கூலி படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளது. அதில், பங்கேற்பதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அரசியல் கேள்வி வேண்டாம்:
"கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. இப்போது வரும் 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை படப்பிடிப்பு உள்ளது என்றார். அப்போது, ரஜினியிடம் தமிழக அரசியல் சூழல் குறித்து கேள்வி எழுப்பியபோது, அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லிருக்கேன். நன்றி" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
ரஜினிகாந்த் அரசியல் குறித்து அவ்வப்போது கூறும் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாகவும், கட்சி தொடங்க உள்ளதாகவும் அறிவித்த ரஜினிகாந்த் தேர்தல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று திடீரென அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அதன்பின்பு, ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடக்கும் கூலி:
அரசியல் கட்சி தொடங்கமாட்டேன் என்று கூறிய பிறகு ரஜினிகாந்த் முழு வீச்சில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற சில அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டுமே ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இது தவிர, ஆன்மீக நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே ரஜினிகாந்த் பங்கேற்று பேசி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினியுடன் பிரபல நடிகர்களான சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாகிர் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நெல்சன் இ்யக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.