Gangers Day 1 Box Office: அஜித்தின் 'குட் பேட் அக்லி' சோலி முடிஞ்சிதா? முதல் நாளே கெத்து காட்டிய 'கேங்கர்ஸ்'!
காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியிருக்கும் 'கேங்கர்ஸ்' படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயக்குநர் சுந்தர் சி, இயக்கி - நடித்துள்ள திரைப்படம் தான் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர் சி உடன் இணைந்து வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்புலி, ஜான் விஜய் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழ்த்து இயக்குநர் சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்பினேஷனில் இந்தப் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இதற்கு முன் இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான, தலைநகரம், வின்னர் போன்ற படங்களின் காமெடி பல வருடங்கள் கழித்தும் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த வருடம், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4, இந்த ஆண்டு வெளியான மதகஜராஜா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது கேங்ர்ஸ் படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் குவிக்குமா என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
நேற்று வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்துள்ளது. தமிழகத்தில் 316 திரையரங்குகளில் வெளியாகி 1279 காட்சிகள் திரையிடப்பட்டது. தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் நேற்று தமிழகத்தில் 1 கோடிக்கும் குறைவு என கூறப்படுகிறது. எனவே முதல் நாளே குட் பேட் அக்லிக்கு டஃப் கொடுப்பதாக பலர் கூறி வருகிறார்கள். அதே போல் உலக அளவில் 2.2 கோடி கேங்கர்ஸ் படம் வசூலித்துள்ளதாம்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி அனைவரும் ரசிக்கும் விதத்தில் உள்ளதால், இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிப்பதோடு, திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்டுகிறது.





















