Watch Video: ’என்னோட செல்ஃபி எடுக்க மாட்டியா’ : பிரபல பாடகரை மேடையில் இருந்து தள்ளிய எம்.எல்.ஏ. மகன்
திருமணங்கள் மற்றும் விருந்து நிகழ்வுகளில் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் சோனு 19 வயதில் பாலிவுட்டில் பாட விருப்பப்பட்டார்.
பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாம் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தாக்கப்பட்ட காட்சி அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1973 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த சோனு நிகாம் தனது 4 வயதிலேயே பாட தொடங்கினார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து திருமணங்கள் மற்றும் விருந்து நிகழ்வுகளில் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் 19 வயதில் பாலிவுட்டில் பாட விருப்பப்பட்டார். இதற்கான மும்பை சென்று ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் குலாம் முஸ்தபா கானானிடம் பயிற்சி பெற்றார்.
தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு தூர்தர்ஷனின் தலாஷ் சீரியலில் இடம்பெற்ற ஹம் தோ சைலா பான் கயே என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர் 1993 ஆண்டு ஆஜா மேரி ஜான் படத்தில் இடம் பெற்ற ஓ ஆஸ்மான் வாலே பாடலை பாடி புகழ்பெற்றார். இந்தி மற்றும் கன்னடத்தில் மிகப்பிரபலமான பாடல்களை பாடியுள்ள சோனு நிகாம் , எண்ணற்ற விருதுகளையும் வென்றுள்ளார்.
#Breaking
— Sameet Thakkar (@thakkar_sameet) February 20, 2023
Singer Sonu Nigam who raised his voice about Azan Loudspeakers attacked by Janab Uddhav Thackeray MLA Prakash Phaterpekar and his goons in music event at Chembur. Sonu has been taken to the hospital nearby. pic.twitter.com/32eIPQtdyM
இப்படியான நிலையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் சோனு நிகாம் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் செம்பூர் பகுதியில் உள்ளூர் எம்எல்ஏ பிரகாஷ் பட்டர்பேகர் சார்பில் 'செம்பூர் விழா' நடந்து வந்துள்ளது. இதில் கடைசி நாளான நேற்று சோனு நிகாம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து அவர் இறங்கும் போது எம்எல்ஏ பிரகாஷின் மகன் சோனுவுடன் அவசர அவசரமாக செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோனுவின் பாதுகாவலர் ஹரி சரியான வழிகாட்டுதலோடு செல்ஃபி எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ மகன் ஹரியை தள்ளியதோடு, சோனு நிகாமையும் கீழே தள்ளினார். உடனே சுதாரித்துக் கொண்ட ஹரி, சோனுவை கீழே விழாமல் காப்பாற்றினார்.
இந்த சம்பவம் சோனுவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்படவில்லை என்றும், சோனு நிகாம் நலமாக இருக்கிறார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சோனுவின் மிக நெருங்கிய நண்பரான ரப்பானி முஸ்தபா கான் இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.