Palak Muchhal: 3000 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பாடகி! யார் இந்த பலக் முச்சல்?
தனது இசைக் கச்சேரிகளில் வரும் நிதியைக் கொண்டு இதுவரை 3000 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி செய்துள்ளார் பாடகி பலக் முச்சல்
பலக் முச்சல்
மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர் பாடகர் பலக் முச்சல். Kaun Tujhe , Naiyo Lagda , Dhoka Dhadi உள்ளிட்ட பிரபல பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். பலக் முச்சல் 'Saving Little Hearts" என்கிற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறார். இதன்படி தற்போது வரை இருதய நோயினால் பாதிக்கப்பட்ட 3000 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவர் உதவியுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏழு வயதில் தொடங்கிய சேவை
தனது ஏழு வயதில் இருந்து இதை பலக் முச்சால் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியபோது “ எனக்கு ஏழு வயது இருக்கும் போது நான் இந்த முன்னெடுப்பைத் தொடங்கினேன். இப்போது இது என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாக மாறியிருக்கிறது. இன்னும் 413 குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சையை நான் முடிக்க நான் உதவ வேண்டும் . தங்கள் குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்கு பண வசதியில்லாத பெற்றோர்கள் சார்பாக என்னுடைய இசைக் கச்சேரியின் மூலம் வரும் தொகை மொத்தமும் செலவிடுகிறேன். எனக்கு இது ஒரு பொறுப்புணர்வை தருகிறது.
இந்த பணிக்காக கடவுள் என்னை ஒரு ஊடகமாக தேர்வு செய்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு திரைப்படங்களில் இசை அமைக்கும் வாய்ப்புகள் இல்லாதபோது நான் 3 மணி நேரம் இசை கச்சேரி நிகழ்த்தி ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக பணம் திரட்டுவேன் . என்னுடைய பாடல்கள் ஹிட் ஆனப்பின் என்னுடைய சம்பளமும் அதிகரித்தது. ஒரு படத்திற்கான சம்பளத்தில் 13 முதல் 14 குழந்தைகளுக்கின் சிகிச்சைக்கு என்னால் உதவ முடிந்தது. என்னுடைய இசையை வைத்து சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதே என் நோக்கமாக இருந்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
And 3000 LIVES SAVED! ♥️
— Palak Muchhal (@palakmuchhal3) June 11, 2024
Thank you for your prayers for Alok! The surgery went successfully and he is absolutely fine now! 🙏🏻#SavingLittleHearts pic.twitter.com/AH6BROpMqV
பலக் முச்சல் இசையமைப்பாளர் மிதுன் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார். தனது இந்த லட்சிய பயணத்தில் தனது கணவர் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “ என் கணவரின் ஆதரவு இல்லை என்றால் என்னுடைய சேவையை இவ்வளவு பெரியளவில் என்னால் சாத்தியப் படுத்தியிருக்க முடியாது, நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை எனக்கு உறுதிபடுத்திக் கொண்டு இருப்பவர் என் கணவர்” என்று தனது கணவர் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.