”அந்த படத்தால எனக்கு கமல் கோவில் கட்டி இருப்பார்” - வில்லன் நடிகரின் ஓபன் டாக்
”தேவர் மகனை பற்றி நாங்கள் பேசியதை கேட்டு இருந்தால் கமல் எனக்கும், சீமானுக்கும் கோவிலே கட்டி இருப்பார்”
தேவர் மகனை பார்த்துவிட்டு நாங்கள் பேசியதை கேட்டு இருந்தால் எனக்கும், சீமானுக்கும் கமல் கோவிலே கட்டி இருப்பார் என நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, ரஜினியின் ஜெய்லர், இந்தியன் -2 படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல், பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிரமிப்பை தந்த நாயகன்
இந்த நிலையில் ஆம்பர கட்டத்தில் சினிமாவுக்கு அறிமுகமானது, நடிகனாக மாறினது என தனது கடந்த கால நினைவுகளை பிரபல ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், கல்லூரி படிக்கும் போது முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்து அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சினிமா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார். தொடர் முயற்சிக்கு பிறகு பாரதிராஜா, ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம், சீமான், SJ சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் ராஜ்கிரண் கூட வேலை பார்க்கும் போது கிராமத்து கதைகளை பார்த்து சலிப்பு ஏற்பட்டதாகவும், அந்த காலக்கட்டத்தில் வெளியான நாயகன் படம் தன்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார். கிராமத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த தனக்கு ”வீனஸ் ஸ்டுடியோவில் செட் போட்டு நாயகனில் பம்பாயை காட்டியது பிரமிப்பை ஏற்படுத்தியது” என ஒரு ரசிகனாக நாயகன் படம் குறித்து புகழ்ந்து தள்ளினார்.
எனக்கு கமல் கோவில் கட்டி இருப்பார்
அதேபோல, கமல், சிவாஜியின் கூட்டணியில் வெளிவந்த தேவர் மகன் குறித்து பேசிய மாரிமுத்து, ” தேவர்மகன் படம் பார்த்த போது எனக்குள் என்ன அதிர்வு ஏற்பட்டதோ, அதே அதிர்வு தான் சீமானுக்கும் ஏற்பட்டது” என்றார். மிட்நைட் ஷோவில் தேவர் மகனை பார்த்து விட்டு, டீ குடிக்க நானும், சீமானும் நடந்து சென்றபோது, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பேசி கொண்டே சென்றோம். தேவர் மகன் குறித்து நாங்கள் புகழ்ந்ததை கேட்டு இருந்தால் எனக்கும், சீமானுக்கும் கமல் கோயிலே கட்டி இருப்பார்” என்றார். ஏனென்றால் தேவர் மகனில் கமல் நடிக்காமல் வாழ்ந்து இருப்பதாக புகழ்ந்தார்.
சிம்பு ஒரு ராக்கோலி
சீமானின் இயக்கத்தில் உருவான பாஞ்சாலங்குறிச்சி அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, 16 வயதினிலேயே, கிழக்கே போகும் ரயில் மட்டுமே பாரதிராஜாவின் கதை என்றும், அவரின் மற்ற படங்கள் எல்லாம் வெளியில் இருந்து வாங்கப்பட்ட கதை தான் என்றார்.
தொடர்ந்து சிம்புவுடன் பணிபுரிந்த மன்மதன், நியூ படத்தின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, இரவு முழுவதும் வேலை செய்வதால் சிம்பு ஒரு ராக்கோலி என்றார். சாதாரண உதவி இயக்குனரில் இருந்து நடிகராக மாறியது வரையிலான காலக்கட்டதில் நடந்த இனிமையான தருணங்களை பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, சினிமா மீதான காதல் இன்னும் குறையவில்லை என்றார்.