'விஜய் பட போஸ்டரை கிழித்தீர்கள்.. கே.ஜி.எஃப். படத்தை தமிழர்கள் தடுத்தார்களா?' சீமான் கேள்வி
தமிழகத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப். இரு பாகங்களாக ரிலீசானது. அதை தமிழர்கள் தடுத்தார்களா? தமிழர்களுக்கு இனவெறி இருப்பதாக கூறுகிறார்கள் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் விஜய் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பேனரை எல்லாம் கிழித்ததாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாக கேஜிஎஃப் படத்தின் பேனரை தமிழர்கள் கிழித்தோமா என நாம் தமிழர் சீமான் காட்டமாக பேசியுள்ளார்.
பாதியில் சென்ற சித்தார்த்:
அருண்குமார் இயக்கத்தில் சித்தார் நடித்த சித்தா படம் கடந்த 28ம் தேதி திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் சீண்டலை கூறும் படமாக சித்தா இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சித்தா படத்துக்கு வரவேற்பு பெற்ற நிலையில் அண்டை மாநிலங்களில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
அதன்படி கர்நாடகாவிற்கு சித்தா படத்தின் புரோமோஷனிற்காக சென்ற சித்தார்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிகழ்ச்சியில் பேசுவதற்காக அமர்ந்திருந்த சித்தார்த்தை தடுத்த கன்னட அமைப்புகள், காவிரி பிரச்சனையை காரணம் காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் படம் என்பதாலும், தமிழ் நடிகர் என்பதாலும் சித்தார்த்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
தமிழர்கள் தடுத்தார்களா?
இதனால், சித்தார்த் தனது நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே கிளம்பினார். இந்த சம்பவம் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் சர்ச்சையானது. இந்த நிலையில் சித்தார்த்துக்கு நடந்தது குறித்து சீமான் பேசியுள்ளார். அதில், சித்தார்த் ஒரு கலைஞன் அவருக்கும், காவிரி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் தம்பி விஜய் படத்தை அவர்கள் ஓடவிடவில்லை. விஜய் படத்தின் பதாகையை கிழித்தீர்கள். அவர் படத்தை திரையிடக்கூடாது என்று தடுத்தீர்கள். ஆனால், தமிழகத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் இரு பாகங்களாக ரிலீசானது. அதை தமிழர்கள் தடுத்தார்களா? தமிழர்களுக்கு இனவெறி இருப்பதாக கூறுகிறார்கள். இதே வேலையை செய்ய எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்?” என பேசியுள்ளார்.
இதேபோன்று ஜெயிலர் படத்தில் நடித்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கன்னட அமைப்புகளின் செயலுக்காக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டு கொண்டார். நடிகர் பிரகாஷ் ராஜும் சித்தார்த்துக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
கர்நாடகாவில் பந்த்:
தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்ததால் கர்நாடகாவில் கடும் போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று கர்நாடகாவின் அரசியல் அமைப்புகள், விவசாயிகள், வணிக சங்கத்தினர் ஒன்றிணைந்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதற்கு எதிராக கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில் தமிழ் பட புரோமோஷனுக்காக சென்ற நடிகர்கள் மீது கர்நாடக அமைப்புகள் வெறுப்பை காட்டியுள்ளன.
மேலும் படிக்க: Hitler Movie FirstLook: இனி விஜய் ஆண்டனியின் ராஜ்ஜியம் தான்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் 'ஹிட்லர்' ஃபர்ஸ்ட் லுக்