(Source: ECI/ABP News/ABP Majha)
DD Returns Box Office: கம்பேக் கொடுத்த சந்தானம்... டிடி ரிட்டர்ன்ஸ் படத்திடம் பின்வாங்கும் எல்.ஜி.எம்... பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாவது பாகமாக வெளியாகியுள்ள சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்ததை போல் வசூலில் முந்தியிருக்கிறது.
நேற்று ஜுலை 28 அன்று ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. எல்.ஜி.எம் போன்ற ரொமாண்டிக் காமெடி முதல் பிட்சா மற்றும் டி டி ரிட்டர்ன்ஸ் என ஹாரர் வரை வெவ்வேறு ஜானர் படங்கள் இதில் உள்ளடக்கம். இந்தப் படங்களில் எது மக்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் முன்னேறிச் செல்கிறது என்பதைப் பார்க்கலாம்.
டிடி ரிடர்னஸ்
பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்லுக்கு துட்டு படத்தின் 3ஆவது பாகம் டி டி ரிட்டர்ன்ஸ்.
முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாகக்கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையில் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் பங்களாவில் தஞ்சம் புகுகின்றனர்.
பேய் படத்தில் லாஜிக் பார்க்க்கூடாது என்ற விதி உண்டு. அதனை மறந்து விட்டு படம் பார்த்தால் சிரிப்பு சரவெடி தான். ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் அப்ளாஸ் அள்ளுகிறது. சந்தடி சாக்கில் அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பகடி செய்கிறார்கள். ஆக மொத்தம் பேய் கான்செப்டில் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
முதல் நாள் வசூல்
நேற்று முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் மொத்தம் 2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது டி.டி ரிட்டர்ன்ஸ். இந்நிலையில், இப்படம் தொடர்ந்து மொத்தம் இரண்டு நாள்களில் 4 கோடிகளை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.
எல்.எஸ்.ஜி
தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு நடிப்பில் வெளியாகி உள்ள படம் லெட்ஸ் கெட் மேரீட். காதலர்கள் திருமணம் என்கிற கட்டத்துக்குள் நுழையும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் எல்.ஜி.எம்.
முதல் நாள் வசூல்
முதல் நாளில் இப்படம் 85 லட்சங்கள் வசூல் செய்துள்ளது. இன்று இரண்டாவது நாளில் மொத்தமாக 1.20 கோடி வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு படங்களுடன் வெளியான லவ், பிட்சா 3 முதலிய படங்கள் குறைந்தளவிலான வசூல் எண்களையே எட்டியுள்ளன. கடந்த ஆண்டு வெளியான குலுகுலு படம் பெரிய அளவிலான வெற்றியை பெறாத நிலையில் தற்போது டி டி ரிட்டர்னஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தானத்தின் கதாநாயக பயணத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக இப்படம் உள்ளது.