ஏ.ஆர் முருகதாஸின் மதராஸி படத்தை பங்கமாக கலாய்த்த சல்மான் கான்
சிகந்தர் பட தோல்விக்கு நடிகர் சல்மான் கான் மீது முருகதாஸ் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது சல்மான் கான் முருகதாஸை வெளிப்படையாக விமர்சித்து பேசியுள்ளார்

இந்த ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தி மற்றும் தமிழில் இரண்டு படங்கள் வெளியாகின. இந்தியில் சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய சிகந்தர் திரைப்படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது.சிகந்தர் பட தோல்விக்கு நடிகர் சல்மான் கான் மீது முருகதாஸ் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது சல்மான் கான் முருகதாஸை வெளிப்படையாக விமர்சித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தையும் சல்மான் கான் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்
சல்மான் கான் மீது பழிபோட்ட முருகதாஸ்
மதராஸி படத்தின் ப்ரோமோஷனின் போது சிகந்தர் பட தோல்விக்கான காரணம் குறித்து ஏ.ஆர் முருகதாஸ் பேசியிருந்தார். சல்மான் கானை வைத்து படம் எடுப்பது என்பது எளிதானது இல்லை. அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்ததால் அவர் பகலில் படப்பிடிப்புக்கு வர மாட்டார். இதனால் பகல் காட்சிகளை எல்லாம் இரவில் செட் போட்டு எடுக்க வேண்டிய கட்டாயம். படப்பிடிப்பு தொடங்குவது இரவு 8 மணி. எல்லா காட்சிகளும் கிராஃபிக்ஸ் , செட்டிற்கு சல்மான் கான் வருவதும் லேட். இப்படி பல விஷயங்கள் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தன என சிகந்தர் பட தோல்விக்கு முருகதாஸ் காரணம் தெரிவித்தார். இதற்கு பதிலாக தற்போது இந்தியில் நிகழ்ச்சியின் போது முருகதாஸை விமர்சித்து சல்மான் கான் பேசியுள்ளார்.
மதராஸி படத்தை கலாய்த்த சல்மான் கான்
இந்தியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சல்மான் கானிடம் எந்த படத்தில் அவர் நடித்ததற்கு வருத்தப்பட்டார் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய சல்மான் கான் " சிகந்தர் படத்தில் நான் நடித்திருக்க கூடாது என ரசிகர்கள் கருதுகிறார்கள். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அந்த படத்தின் கதை ரொம்ப நல்ல கதை. ஆனால் படத்தின் இயக்குநர் நான் இரவு 8 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்ததால் படம் தோல்வி அடைந்ததாக சொல்கிறார். என் விலா எலும்பில் அடி பட்டிருந்தது. ஆனால் அவர் சமீபத்தில் தமிழில் எடுத்த மதராஸி படத்தில் நடித்த நடிகர் காலை 6 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்தாரா. ஆனால் அந்த படமும் வசூலில் படுதோல்வி அடைந்தது. சிகந்தர் படத்தில் இருந்து முதலில் படத்தின் தயாரிப்பாளர் விலகினார் . பின் முருகதாஸ் படத்தை கண்டுகொள்ளாமல் தமிழில் ஒரு படத்தை எடுக்க சென்றார். அதுவும் ஒரு பெரிய பட்ஜெட் படம் ஆனால் அது சிகந்தர் படத்தைக் காட்டிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றி" என சல்மான் கான் நக்கலாக கூறினார்






















