Jani Master : "பாலியல் புகார் சிக்கல்” பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது..!
உடன் பணியாற்றிய பெண் நடனக் கலைஞரை மைனராக இருந்தபோதே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஹைதரபாத் போலீஸ் ஜானி மாஸ்டரை கைது செய்துள்ளது.
ஜானி மாஸ்டர்
புட்ட பொம்மா , மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் மேகம் கருக்காதா பாடலுக்கு இவருக்கு சிறந்த நடனக்கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்கள் முன்பாக ஜானி மாஸ்டர் மீது அவருடன் பணியாற்றிய பெண் ஒருவர் அவர் மீது காவல் துறையிடம் புகாரளித்தார்.
கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் நடன இயக்குநராக பணியாற்றி வருவதாகவும். பணியாற்றிய காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு இப்போது 21 வயது என்றும் தான் மைனராக இருந்தபோதே தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே திருமணமான ஜானி மாஸ்டர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை மதமாற்றம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜானி மாஸ்டர் மீது ஹைதராபாத் காவல்துறை போக்சோ உள்ளிட்ட மூன்று குற்றப் பிரிவுகளில் வழக்குப் போட்டது.
ஜானி மாஸ்டர் கைது
வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். சமீபத்தில் அவர் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இன்று செப்டம்பர் 19 ஆம் தேதி ஹைதராபாத் போலீஸ் ஜானி மாஸ்டரை பெங்களூரில் வைத்து கைதுசெய்தது.
ஹேமா கமிட்டி
கேரளாவில் கடந்த மாதம் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை எல்லா சினிமா துறைகளைலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே சமயத்தில் தமிழ் , மலையாள , தெலுங்கு உள்ளிட்ட திரைத்துறைகளில் பல்வேறு பெண்கள் ஆண்களின் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள். ஹேமா கமிட்டியைப் போல தமிழில் தென் இந்திய தயாரிப்பாளர் சங்கம் விசாகா கமிட்டியை அமைத்துள்ளது. தெலுங்கிலும் இதேமாதிரி கமிட்டி அமைத்து பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என நடிகை உட்பட பல முன்னணி நடிகைகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். தெலுங்கு துறையில் தொடர்ச்சியாக பணியாற்றி வந்த ஜானி மாஸ்டரின் கதை அங்கும் ஹேமா கமிட்டி போல் கமிட்டி உருவாக வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்